
posted 26th November 2021
“கலைஞர்களை உருவாக்குவதிலும் அவர்களது கலைகளை ஊக்குவிப்பதிலும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் “தொலஸ்ககே பகன” தேசிய கலாச்சார வேலைத்திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்க நாம் முனைப்புடன் செயற்படுவோம்”
இவ்வாறு, நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம்.அப்துல் லத்தீப் கூறினார்.
கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில், நிந்தவூர் பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் “தொலஸ் மகேபஹன” வேலைத்திட்டத்தில் உருவாக்கப்பட்ட நிந்தவூர் ரிதம் கலை மன்றத்தின் மெல்லிசை மழை நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நிந்தவூர் ரிதம் கலை மன்றத்தின் தலைவர் ஏ.பீ.எம்.றியாழ் தலைமையில், நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில், அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ரீ.எம்.றிம்சான், நிந்தவூர் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர்களான கே.சுதர்சன், எஸ். சுரேஷ்குமார் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
ரிதம் கலை மன்றச் செயலாளர் ஏ.எம்.ஆஸிப்பின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் மன்ற உறுப்பினர்கள் பலரது மெல்லிசைப்பாடல்களும் அரங்கேற்றப்பட்டதுடன்,
மன்றத்தின் வளர்ச்சிக்கும், “தொலஸ் மகே பஹன” வேலைத்திட்டத்தில் உட்படுத்தியும் ஊக்கமளித்துவரும், பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதிகளும் மன்றத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கவும்பட்டது.
அத்துடன் நிகழ்வில் மெல்லிசை மழை பொழிந்த மன்றத்தின் சகல உறுப்பினர்களுக்கும் நற்சான்றிழ்களும் வழங்கப்பட்டன.
பிரதேச செயலாளர் சட்டத்தரணி அப்துல்லத்தீப் நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“எமது பிரதேசங்களில் இலைமறைகாய்களாகவுள்ள கலைஞர்களை இனம் கண்டு ஊக்குவிப்பதிலும், அதன் மூலம் அவர்களது திறமைகளை வளர்த்து மேலோங்கச் செய்வதிலும் நாம் விசேட கவனம் கொண்டுள்ளோம்.
கலாச்சார அலுவல்கள் அமைச்சும், கலாச்சார திணைக்களமும் சிறந்த பலதிட்டங்களை அறிமுகப்படுத்திவருகின்றது.
இந்த வகையில் பிரதேச செயலக கலாச்சாரப் பிரிவும், அதனுடன் இணைந்த பிரதேச கலாச்சாரப் பேரவை, கலை, இலக்கிய மன்றங்களின் செயற்பாடுகளும், ஒத்துழைப்பும் அவசியமாகின்றன.
இதன்படி இலங்கைக்கே உரிய அர்த்தமுள்ள கலாச்சாரம், மற்றும் ஒழுக்கக் கோட்பாடு ஆகியவற்றை எதிர்கால சந்ததியினருக்கு உரித்தாக்கும் பொருட்டு தனித்துவ பாரம்பரியங்களைப் பாதுகாக்கும் நோக்குடனானதாக இத்திட்டம் அமைகின்றது.
எனவே கிராமப்புறக்கலைஞர்களின் தளத்தினை உருவாக்கும் வகையில் கலைஞர்களின் ஆக்கத்தளமாக பிரதேச செயலகங்கள் திகழ்கின்றன.
இதற்கமைய மறைந்து போகும் பலகலைகளுக்கும் உயிரூட்டி, கலைஞர்களை அதன்பால் விழிப்பூட்டும் நடவடிக்கைகளுக்கு நாம் முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்.
கிராமிய கலை, கலாச்சாரத்தை மக்கள் மயப்படுத்தும் இச்செயற்பாடுகளுக்கு எமது பிரதேச செயலகம் முழு ஒத்துழைப்பை வழங்கும்.
இதற்கு உந்துசக்தியாகப்பிர தேச செயலாககலாச்சாரப் பிரிவு உத்தியோக்தர்களின் அர்ப்பணிப்பான சேவைகளும் அமைந்துள்ளன.
ரிதம் கலை மன்றத்தின் இன்றைய நிகழ்வு பெரிதும் பாராட்டத்தக்கவையாக அமைந்திருந்தது.
எதிர்காலத்தில் சுயமான வாத்தியக்கருவிகள் கொண்டும், சுயமாக இயற்றிய பாடல்களுடனும் இக்கலை மன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு ஏதுவான ஆதரவை நாம் வழங்குவோம்” என்றார்.
அதிதிகளில் பலரும் நிகழ்வில் உரையாற்றியதுடன் கலைமன்ற உறுப்பினர்களின் ஆற்றல் திறமைகளுக்குப் பராட்டும் தெரிவித்தனர்.

ஏ.எல்.எம்.சலீம்