தென்மராட்சிப் பகுதியில் கொரோனாப் பரவல் மிகத் தீவிரம்

தென்மராட்சிப் பகுதியில் கொரோனாப் பரவல் மிகத் தீவிரம் பெற்றுள்ள நிலையில் கடந்த 16 நாட்களில் மட்டும் 118 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்துடன், 04 மரணங்கள் நிகழ்ந்துள்ளமை தொடர்பிலான அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவல்களை சுகாதாரத் தரப்பினர் வெளியிட்டுள்ளனர்.
தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் நோய் அறிகுறிகளுடன் தாமாக வந்து அன்ரிஜென் பரிசோதனைக்கு தம்மை உட்படுத்திக்கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் மக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றாமை காரணமாக சமூகத்தில் தொற்று தீவிரமாகப் பரவியிருப்பதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கொரோனாப் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இலவச துரித அன்ரிஜென் பரிசோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் அறிவித்துள்ளனர்.

அது குறித்து அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட இடங்களில் வசிப்பவர்கள் கோவிட் அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக உங்களை சுயதனிமைப்படுத்திக் கொண்டு காலதாமதமின்றி பின்வரும் வைத்தியசாலைகளில் ஏதேனும் ஒன்றை தொடர்புகொண்டு உங்களை துரித அன்ரிஜென் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுங்கள்.

1. கொடிகாமம் பிரதேச வைத்தியசாலை

2. வரணி பிரதேச வைத்தியசாலை

3. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை

இவ்வைத்திய சாலைகளில் பரிசோதனைக்கு செல்பவர்கள் பரிசோதனை நேரத்தை உறுதி செய்துவிட்டு செல்லுங்கள்.

இவற்றுக்கு மேலதிகமாக சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை ஆகிய மூன்று தினங்களும் காலை 8.30 மணிக்கு குறித்த பரிசோதனை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

தினமும் சராசரியாக 8 முதல் 10 தொற்றாளர்கள் என்றளவில் எண்ணிக்கை உயரத்தொடங்கி விட்டது. சுகாதார விதிமுறைகளை இறுக்கமாக கடைப்பிடியுங்கள்-என்றனர்.

தென்மராட்சிப் பகுதியில் கொரோனாப் பரவல் மிகத் தீவிரம்

எஸ் தில்லைநாதன்