
posted 4th November 2021
கிழக்கு மாகாணத்தில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற கால நிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
பொழியும் மழை நீர் தேங்கும் நிலையுள்ளதால் டெங்கு நுளம்புகள் பெருகும் நிலையுள்ளதாகவும், பொது மக்கள் தமது வீடுகள், சுற்றாடல்களை டெங்கு நுளம்புகள் பெருகா வண்ணம் சுத்தமாக வைத்திருக்க வேண்டுமெனவும் சுகாதாரப் பிரிவினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். பரூஸா நக்பரின் நேரடி கண்காணிப்பில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன்,
ஏற்கனவே டெங்கு பற்றிய அறிவூட்டல்களும், ஒழுக வேண்டிய நடைமுறைகள் தொடர்பிலும் பொது மக்களுக்கு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பரூஸா நக்பர் தெரிவித்தார்.
எனவே, நாளை வெள்ளிக்கிழமை மதல் தமது தலைமையில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், டெங்கு பிரிவினர் பிரதேசத்தின் சகல இடங்களிலும் களப்பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இக்களப்பரிசோதனைகளின் போது, டெங்கு பரவாமல் தடுக்கும் அறிவுறுத்தல்களின்படி செயற்படாது,
டெங்கு நுளம்புகள் பெருகத்தக்க வகையில் தமது இருப்பிடங்கள், வளவுகள் கட்டிடங்களை வைத்திருப்போர் மீது எத்தகைய தயவு, தாட்சண்யமுமின்றி வழக்குத் தொடரப்படுமெனவும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.பரூஸா நக்பர் எச்சரித்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம்