ஜேர்மனியத் தூதுவருடன்  பேச்சு நடத்திய ரெலோ

இலங்கைக்கான ஜேர்மனியத் தூதுவர் ஹோல்கர் ஸுபேர்ட், உதவித் தூதுவர் ஓலாப் மல்ஷோ ஆகியோருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ பேச்சு நடத்தியுள்ளது.

கொழும்பிலுள்ள ஜேர்மன் தூதரகத்தில் இன்று புதன்கிழமை முற்பகல் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இதில் ரெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் மற்றும் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைகள், ஐ.நா. 46/1 பிரேரணை, பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படல், ஜி.எஸ்.பி. வரிச் சலுகைகள், தமிழ் மக்கள் முகம் கொடுத்திருக்க முக்கிய பிரச்சினையான காணி அபகரிப்பு, இனக் குடிப்பரம்பல் சிதைப்பு என்பவற்றைத் தற்காலிகமாக தடுத்து நிறுத்தும் முயற்சியாக ஐ.நா. பிரேரணையில் பரிந்துரைக்கப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவது, மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்துவது சம்பந்தமாகக் கலந்துரையாடப்பட்டன.

தமிழர்கள் ஒருமித்த நிலைப்பாட்டில் சம்பந்தப்பட்ட தரப்புகளை வலியுறுத்துவது, அதன் முக்கியத்துவம், அதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அவற்றின் முன்னேற்றம், ஆதரவு தரப்புக்கள், எதிர்கால நகர்வுகள் என்பன பற்றியும் ரெலோ தரப்பால் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடைபெற்றது.

ஜேர்மனியத் தூதுவருடன்  பேச்சு நடத்திய ரெலோ
ஜேர்மனியத் தூதுவருடன்  பேச்சு நடத்திய ரெலோ

எஸ் தில்லைநாதன்