
posted 18th November 2021
வெற்றிடமாகியுள்ள கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது 19ஆம் வட்டார உறுப்பினர் பதவிக்கு பிரபல சமூக சேவையாளர் இக்ராஹ் ஜலாலை நியமிக்குமாறு மருதம் கலைக்கூடல் மன்றம், சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது விடயமாக மன்றத்தின் தலைவர் அஸ்வான் ஷக்காப் மௌலானா தெரிவிக்கையில்;
கல்முனை மாநகர சபையின் 19ஆம் வட்டார உறுப்பினராக பதவி வகித்த முஹர்ரம் பஸ்மீர் கடந்த டிசம்பர் மாதமளவில் இராஜினாமா செய்திருந்தார். எனினும் 11 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இன்னும் அந்த வட்டாரத்திற்கு புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படாமல் வெற்றிடமாக இருந்து வருகின்றது.
கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கல்முனை மாநகர சபைத் தேர்தலில் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினால் களமிறக்கப்பட்ட சுயேட்சைக் குழுவானது சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள 06 வட்டாரங்களையும் வெற்றி கொண்டு மேலதிக பட்டியல் ஊடாக கிடைக்கப் பெற்ற 03 ஆசனங்களுமாக மொத்தம் 09 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களுள் ஒருவரே முஹர்ரம் பஸ்மீர் என்பவர் மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார். இவரது பதவி விலகலைத் தொடர்ந்து குறித்த வட்டாரத்திற்கு நீண்ட காலமாக உறுப்பினர் ஒருவர் இல்லாமையினால் மாநகர சபையின் சேவைகளை பெற்றுக்கொள்வதில் அசௌகரியங்கள் நிலவுவதாக இப்பகுதி மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
ஆகையினால், இனியும் தாமதியாமல் குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் சார்பான சுயேட்சைக்குழு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் இவ்வெற்றிடத்திற்கு தனது சொந்த பொருளாதாரத்தின் ஊடாக சாய்ந்தமருது மண்ணுக்கு பல்வேறு சேவைகளை ஆற்றி வருகின்ற நேர்மையும் நன்மதிப்புமிக்க இக்ராஹ் ஜலாலை நியமிக்க வேண்டும் எனவும் மருதம் கலைக்கூடல் வேண்டுகோள் விடுப்பதாக எமது கலைக்கூடல் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

ஏ.எல்.எம்.சலீம்