
posted 5th November 2021
தங்கள் கையடக்க தொலைபேசியில் செல்பி எடுப்பதில் மோகம் கொண்டமையால் இருவரில் ஒருவர் தனது உயிரை ரயிலில் மோதுண்டு போக்கிக் கொண்டார்.
இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது;
மன்னார் முருங்கன் பகுதியிலிருந்து பரிகாரிகண்டல் மற்றும் களிமோட்டை பகுதிகளை சார்ந்த இரு இளைஞர்கள் செட்டிக்குளம் பகுதிக்கு இன்று வெள்ளிக்கிழமை (05.11.2021) காலை பறப்பட்டு சென்றதாகவும், இவர்கள் செல்லும் வழியில் மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் அமைந்துள்ள கல்லாறு பாலத்தில் நின்று இருவரும் தங்கள் கையடக்க தொலைபேசியில் செல்பி எடுத்துக்கொண்டிருந்ததாகவும், அவ்வேளையில் சம்பவம் நடைபெற்ற அன்று காலை தலைமன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் அவ்விடத்துக்கு சென்றதை கவனத்தில் எடுக்காத நிலையில் இருவரில் ஒருவர் ரயிலில் மோதுண்டு இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரில் ஒருவர் பாலத்திலிருந்து கீழே குதித்து தப்பித்துக் கொண்டதாகவும் ஆரம்ப விசாரனையிலிருந்து தெரிய வந்துள்ளது.
இச் சம்பவம் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் நடைபெற்றதாகவும் இறந்தவர் மன்னார் பரிகாரிகண்டல் கண்ணா (வயது 21) என அழைக்கப்படுபவர் எனவும் உயிர் தப்பியவர் களிமோட்டையைச் சார்ந்த சுரேன் என அழைக்கப்படுபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொலிசார் விசாரனையை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

வாஸ் கூஞ்ஞ