சுற்றுவட்டப்பாதை உடனடியாக அமைக்கும் படி உத்தரவு - பிரதமர்

கிளிநொச்சி டிப்போ சந்தியில் சுற்றுவட்டப்பாதை அமைக்கும் சிறீதர ன் எம்,.பி.யின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுமாறு நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உத்தரவிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள்,மற்றும் கிராமிய கலைநுட்ப, மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, அரசாங்க சேவைகள்,மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் மீதான குழு நிலைவிவாத்தில் உரையாற்றிய சிறீதரன் எம்.பி. டிப்போ சந்தியில் சுற்றுவட்ட சந்தியை அமைத்து சைகை விளக்குகளை பொருந்துமாறு தான் பலதடவைகள் கோரிக்கை விடுத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும் அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபைத் தலைவருக்கு கடிதம் எழுதியும் அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை எனவும் தயவு செய்து முதலில் அதனை நிறைவேற்றுங்கள் எனவும் சபையில் இருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது எழுந்த நெடுஞ்சசாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கிளிநொச்சி பிரதேசத்தின் போக்குவரத்து பிரச்சனைகளை உடனடியாக தீர்க்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ எனக்கு இப்போது பணிப்புரை விடுத்துள்ளார். உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

அதேவேளை வடக்கில் விபத்துக்கள் இடம்பெறுவதாக கூறப்படும் நிலையில், இராணுவ வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படுவதாக மாத்திரம் தகவல்களை வெளியிட வேண்டாம். தென்பகுதியிலும் இராணுவ பொலிஸ் வாகனங்கள் மோதி உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. எனவே சர்வதேசத்துக்காக தவறான தகவல்களை வழங்க வேண்டாம் .

இலங்கையில் நாள் ஒன்றுக்கு விபத்தினால் 8 பேர் மரணமடைகினறனர். வருடமொன்றுக்கு 27,000 விபத்துக்கள் இடம்பெறுகின்றன. இவற்றில் 7000 விபத்துக்கு பாரதூரமானவையாகவுள்ளன. இவ்வாறான விபத்துக்களைக் கட்டுப்படுத்த ஜனாதிபதியின் பணிப்புரையில் விசேட வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இது 4 வருடங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.

இது தொடர்பில் சிறீதரன் எம்.பி. கூறுகையில், உடனடியாகவே நடவடிக்கை எடுத்த பிரதமருக்கும் போக்குவரத்து அமைச்சருக்கும் நெடுஞ்சாலைகள் அமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன் என் றார்.

சுற்றுவட்டப்பாதை உடனடியாக அமைக்கும் படி உத்தரவு - பிரதமர்

எஸ் தில்லைநாதன்