
posted 27th November 2021
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 216 குடும்பங்களைச் சேர்ந்த 758 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரென யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார்.
தற்போதைய காலநிலை தொடர்பாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு நேற்று வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணிவரையான நிலவரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் .
நேற்று முதல் பெய்தமழை மற்றும் அதிக காற்று காரணமாக 216 குடும்பங்களைச் சேர்ந்த 758 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் காரைநகரில் இரண்டு குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தற்காலிகமாக வியாவில் பயிற்சி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும்.
இதேவேளைகாரைநகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியினை யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் மற்றும் யாழ் மாவட்ட அனர்த்த முகாமை பிரிவினர் நேரடி கள விஜயத்தினை மேற்கொண்டு சேத விபரங்கள் தொடர்பில் களஆய்வில் ஈடுபட்டனர்
கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 6 நீர்ப்பாசன குளங்கள் வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த வெெள்ளிக்கிழமை காலை 7 மணி வாசிப்பின் அடிப்படையில், கிளிநொச்சி மாவட்டத்துக்கான நீர்ப்பாசனக் குளமான 36 அடி அடைவுமட்டம் கொண்ட இரணைமடுக்குளம் 31 அடி 3 அங்குலமாக உயர்ந்துள்ளது.
25 அடி அடைவுமட்டம் கொண்ட அக்கராயன்குளம் 23 அடி 1 அங்குலமாகவும், 10 அடைவுமட்டம் கொண்ட கரியாலை நாகபடுவான்குளம் 7 அடி 11 அங்குலமாகவும் உயர்ந்துள்ளது.
26 அடி அடைவுமட்டம் கொண்ட கல்மடுகுளம் அடைவுமட்டத்தை அடைந்து 1 அங்குலம் வான் பாய்ந்து வருகிறது.
19 அடி அடைவுமட்டம் கொண்ட புதுமுறிப்புகுளம் அடைவுமட்டத்தை அடைந்து 3 அங்குலம் வான் பாய்ந்து வருவதுடன், 12 அடி அடைவுமட்டம் கொண்ட பிரமந்தனாறுகுளம் அடைவுமட்டத்தை அடைந்து 7 அங்குலம் வான் பாய்ந்து வருகின்றது.
இதேவேளை, 10 அடி ஆறு அங்குலம் கொள்ளளவு கொண்ட கனகாம்பிகைக்குளம் அடைவுமட்டத்தை அடைந்து 3 அங்குலம் வான் பாய்ந்து வருவதுடன், 9 அடி ஆறு அங்குலம் அடைவுமட்டம் கொண்ட வன்னேரிக்குளம் அடைவுமட்டத்தை அடைந்து 4 அங்குலம் வான் பாய்ந்து வருகின்றது.
8 அடி ஆறு அங்குலம் அடைவுமட்டம் கொண்ட குடமுருட்டிக்குளம் அடைவுமட்டத்தை அடைந்து வான் பாய ஆரம்பித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர் நிலைகளுக்கான நீர்வருகை தொடர்ந்தும் காணப்படுவதாலும், மாவட்டத்துக்கு மழை பெய்யும் சார்த்தியக்கூறுகள் தொடர்ந்தும் இருப்பது தொடர்பில் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ள நிலையில் மக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நீர்நிலைகள், நீர்வடிந்தோடும் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும், தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்