சாணக்கியன் கடும் கண்டனம்!

மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தொடர்ச்சியாக பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், பொலிஸார் கைகட்டி அதனை வேடிக்கை பார்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் விசனம் வெளியிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் அறையினை முற்றுகையிட்டு நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதன்காரணமாக நேற்றைய தினம் பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் முற்றாக முடங்கியிருந்தது. பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு பகுதியில் வன இலாகாவுக்குரிய காணியை விகாரை அமைப்பதற்கு கோரியதாகவும் அதனை வழங்குவதற்கு தனக்கு அதிகாரம் இல்லையென பிரதேச செயலாளர் தெரிவித்ததை தொடர்ந்தே இந்த போராட்டத்தினை குறித்த மத குரு முன்னெடுத்திருந்தார்.

இந்தநிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இரா.சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “பிரதேச செயலாளரையும் ஊழியர்களையும் அச்சுறுத்தும் வகையில் குறித்த மத குரு போராடிவருவதாகவும், பொலிஸார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு பகுதியில் வன இலாகாவுக்குரிய காணியை விகாரை அமைப்பதற்கு மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கோரியுள்ளார்.

அதனை வழங்குவதற்கு தனக்கு அதிகாரம் இல்லையென பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் தெரிவித்ததை தொடர்ந்தே இவர் அவரின் அறையினை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்தியிருந்தார். இதன்காரணமாக பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் முற்றாக நேற்றைய தினம் முடங்கியிருந்தது. பிரதேச செயலாளரையும், அரசாங்க ஊழியர்களின் நடவடிக்கைக்கு அச்சுறுத்தும் வகையில் குறித்த பிக்குவின் நடவடிக்கைகள் காணப்பட்டன.

அங்குள்ள ஊழியர்கள் வீதியில் இறங்கி குறித்த பிக்குவை கைது செய்யக்கோரி போரட்டம் நடாத்திய போதும், மக்களையும் ஊழியர்களையும் காப்பாற்ற வேண்டிய பொலிஸார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர்.
பெண் ஒருவர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது இவர்கள் கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏனோ? எமது மக்களுக்கு இந் நாட்டில் எவ்வித பாதுகாப்பும் இல்லை வாழும் உரிமையும் இல்லை.

இவரின் இவ்வாறான செயல்பாடுகளானது எமது மாவட்டத்தில் தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டு வருகின்றது. நாடாளுமன்றத்தில் கூட இவரின் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்திருந்தேன்.

இவரினால் எமது மக்களும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர். தற்போது ஒரு நாடு ஒரு சட்டம் அமுல்படுத்தப்படுவது இதுதானா என்ற கேள்விக்குறி எழுகின்றது.

இவ்வாறான செயல்பாடுகளுக்கு மக்கள், மற்றும் இளைஞர்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும் அரச தரப்பு அரசியல்வாதிகளை நம்பி இருந்து எவ்வித பலனும் கிடைக்கப்போவதில்லை. எமது மக்களே மென்மேலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர். எமது மக்களுக்கான பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

சாணக்கியன் கடும் கண்டனம்!

ஏ.எல்.எம்.சலீம்