சம்பள உயர்வு வழங்குக!

“சகல அரசாங்க ஊழியர்களுக்கும் நாட்டின் தற்போதய வாழ்க்கைச் செலவு உயர்வைக் கருத்தில் கொண்டு பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்”

இவ்வாறு அரசாங்கத்தைக் கோரும் தீர்மானம் ஒன்றை, அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கம் நிறைவேற்றியுள்ளது.

அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 14 ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தில் மேற்படி தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

சங்கத்தலைவரும், நிந்தவூர் பிரதம தபாலதிபருமான யூ.எல்.எம்.பைஸர் தலைமையில் நடைபெற்ற இந்த வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் மேலும் பின்வரும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் அலுவலகம் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஸ்தாபிக்கப்பட்டு தற்காலிக அலுவலகமாகவே இதுவரை இயங்கிவருகின்றது.

இந்த முக்கிய அலுவலகத்தை இன்னும் தாமதியாது நிரந்தர அலுவலகமாகத் தரமுயர்த்தி இயங்க ஆவண செய்ய வேண்டும்.

உப அஞ்சல் அதிபர்களுக்கான அலகு கொடுப்பனவு அதிகரிக்கப்படுவதுடன் சனிக்கிழமைக்கான கொடுப்பனவும் வழங்கப்பட வேண்டும்.

உப அஞ்சல் அதிபர்களுக்கும், ஏனைய அரச ஊழியர்களுக்கு உள்ளது போல் விடுமுறைகள் வழங்கப்பட வேண்டும்.

தற்போது பெண் உப அஞ்சல் அதிபர்களுக்கு 28 நாட்களே பிரசவ விடுறை வழங்கப்படுகின்றது. ஏனைய அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் இவர்களுக்கும் 84 நாட்கள் பிரசவ விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

இத்தீர்மானங்களின் பிரதிகள் ஜனாதிபதி, பிரதமர், தபால், தொலைத் தொடர்புகள் அமைச்சர் மற்றும் அஞ்சல் மா அதிபர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

சம்பள உயர்வு வழங்குக!

எ.எல்.எம்.சலீம்