கௌதாரிமுனை பிள்ளையார் ஆலயத்தின் புனரமைப்பு ஆரம்பம்

ஊடகப்பிரிவு

கௌதாரிமுனை பிள்ளையார் ஆலயத்தை பாதுகாப்பதற்கான புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ விதுர விக்கிரமநாயக்க அவர்களும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களும் பூநகரி, கௌதாரிமுனை பகுதிக்கான விஜயமொன்றை இன்று மேற்கொண்டனர்.

இவ்விஜயத்தின் போது, கௌதாரிமுனை பிள்ளையார் ஆலயத்தை பாதுகாப்பதற்கான புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இவ்வாலயமானது நாயக்கர் கால கட்டிட வடிவத்தை பிரதிபலிப்பதுடன், செண்பகப்பெருமாள் காலத்து ஆலயமாக இதை கருதமுடியும் எனவும், இவ்வாலயத்தை பாதுகாத்து ஆய்வுகளை மேற்கொள்ளும்போது மேலும் பல வரலாற்று தகவல்களை பெறமுடியும் எனவும் வரலாற்றுத்துறை பேராசிரியர் புஸ்பரட்ணம் தெரிவித்தார்.

தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் முறையான அகழாய்வு உள்ளிட்ட பணிகளை செயற்படுத்தல், தமிழர் வரலாற்றுச்சின்னங்களைப் பாதுகாக்கும் மற்றும் பராமரிக்கும் செயற்பாடுகளைத் திட்டமிடல், அருங்காட்சியகங்களிலுள்ள கலைப்பொருட்களுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்தல், வரலாற்றுச் சின்னங்களை நகலெடுத்தல் அச்சிடுதல் நுாலாக்குதல் போன்ற செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதனுாடாக தமிழர் கலாச்சார வரலாற்று ஆதாரங்களைப் பாதுகாத்தல் போன்ற எமது மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இத்திட்டங்களுக்கான முன்மொழிவுகளை, கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் முன்வைத்திருந்தார்.

இந்நிகழ்வில், தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி. நிஷாந்தி ஜெயசிங்க, இலங்கை தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மானதுங்க, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், மற்றும் தொல்லியல்துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கௌதாரிமுனை பிள்ளையார் ஆலயத்தின் புனரமைப்பு ஆரம்பம்

எஸ் தில்லைநாதன்