
posted 11th November 2021
இலங்கையில் மேலும் 488 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகதாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள பிந்திய அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 547,141 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 333 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 522,517 ஆக அதிகரித்துள்ளது.
யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகுவோரின் எண்ணிக்கை அண்மையில் சடுதியாக குறைந்திருந்த நிலையில் நேற்று 43 பேர் தொற்றாளர்களாக இனங்காணபட்டுள்ளனர்.
ஏனைய மாவட்டங்களைப்போல யாழ்.மாவட்டத்திலும் மீண்டும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனினும் பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவதன் மூலம் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும், என்றார்

எஸ் தில்லைநாதன்