
posted 25th November 2021
வவுனியா, பாவற்குளத்துக்கு தாயுடன் நீராடச் சென்ற 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளான் என உளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியில் வசித்து வரும் தாய் ஒருவர் தனது பிள்ளைகளுடன் பாவற்குளம் குளத்துக்கு நீராடச் சென்றுள்ளார்.
இதன்போது 4 வயதுச் சிறுவனைக் குளத்தில் நீராட விட்டு விட்டு தாய் கரைக்கு வந்து மீண்டும் திரும்பிக் குளத்துக்குள் சென்றபோது நீராடிக்கொண்டிருந்த சிறுவனை காணவில்லை. இதனையடுத்து தாயார் அங்கு நின்றவர்கள் மற்றும் ஊரவரை அழைத்துச் சிறுவனை தேடியபோது அவன் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டார்.
உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் சிறுவன் மரணமடைந்துள்ளார்.

எஸ் தில்லைநாதன்