
posted 6th November 2021
ஆறுமாதகால ஜனநாயக விரோத சிறைப்படுத்தலின் பின்னர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், பிணையளிக்கப்பட்டதையடுத்து, கடந்த வாரம் முதல் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று தமது ஆதரவாளர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள், பொது மக்களைச் சந்தித்து வருகின்றார்.
இதன் தொடர்ச்சியாக கடந்த 5 ஆம் திகதி மாலை குருணாகல் கெகுண கொல்ல பகுதிக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அங்கு மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினருமான நஸீரின் இல்லத்தில் சந்திப்புகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதன் போது ஆதரவாளர்களும், கட்சித் தொண்டர்கள், முக்கியஸ்தர்கள், பொது மக்கள் என பெருமளவிலானோர், கட்சி பேதங்களுக்கு அப்பாலும் பலரும் கலந்து கொண்டு தலைவர் ரிஷாட்டை ஆரத்தழுவி மகிழ்ச்சிப் பிரவாகத்துடன் அளவளாவினர்.
இதேவேளை தனது விடுதலைக்காகப் பிரார்த்தித்த அனைவருக்கும் தனது உளமார்ந்த நன்றிகளை அவர் தெரிவித்துக்கொண்டார்.
மேலும் 6 ஆம் திகதி சனிக்கிழமை தலைவர் ரிஷாட் திருமலை மாவட்ட கந்தளாய், புல்மோட்டை, புடவைக்கட்டு, குச்சவெளிபகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

ஏ.எல்.எம்.சலீம்