
posted 3rd November 2021
கிளிநொச்சியில் நேற்று அடையாளம் காணப்பட்ட 20 பேரில் 10 பேர் 16 வயதுக்கு குறைந்த பாடசாலை மாணவர்கள் என்பதையும், பண்டிகைக் காலத்தில் சுகாதார நிலையை உணர்ந்து ஒத்துழைத்து செயல்படுமாறும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் என். சரவணபவன் தெரிவித்துள்ளார்.
கோவிட் பரவல் மற்றும் கட்டுப்படுத்தும் செயல்பாடுகள் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு மூன்றாம் கட்டமாக பைசர் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 வீதமானவர்கள் முதல் தடுப்பூசியாக சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுள்ளார்கள். இரண்டாவது தடுப்பூசியை 70 வீதமானவர்கள் பெற்றுள்ளார்கள்.
இதேவேளை 20 வயது தொடக்கம் 30 வயதுக்குட்பட்டவர்கள் 34 வீதமானவர்கள் மாத்திரமே தடுப்பூசியை பெற்றுள்ளார்கள். எனவே, எதிர்வரும் நாட்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பைசர் தடுப்பூசி வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து 30 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கான 3ஆம் கட்ட தடுப்பூசிகள் கட்டம் கட்டமாக வழங்கப்படும்.
பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளனது. 80வீதமான மாணவர்கள் தடுப்பூசியை பெற்றுள்ளார்கள். மிகுதியானவர்களும் பின்னிற்காமல் பாடசாலைகளுக்கு அல்லது சுகாதார சேவைகள் பணிமனைக்கு சென்று தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவும்.
ஏனைய 20 வீதமானவர்கள் ஏன் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை என்பது வினாவாக இருக்கின்றது. பாடசாலைகள் ஆரம்பிக்கவுள்ளன. ஆகவே, பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். சிறு பிள்ளைகளுக்கான பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும்.
இந்த நோய் பரவல் மீண்டும் ஏற்படலாம் என்ற அச்ச உணர்வு காணப்படுகின்றது. ஆகவே, சுகாதார முறைகளை பின்பற்றி பாடசாலைகள் நடைபெற வேண்டும். அதேவேளை, பாடசாலைகளுக்கு காய்ச்சல், தடிமன் அறிகுறிகளுடன் வந்தால் அவர்களின் நோய் நிலையை தீர்மானித்துக்கொள்ள வேண்டும். இனிவரும் காலம் மிகவும் முக்கியமான காலம். இதில் மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி நோய் பரவலை கட்டுப்படுத்த உதவவேண்டும்.
கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட் பரவல் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நாளாந்தம் 10 தொடக்கம் 20 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். நேற்று முன் தினம் 20 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டார்கள். நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்ட 20 பேரில் 10 பேர் 16வயதுக்கு குறைந்தவர்களாக உள்ளனர். அவர்கள் பாடசாலை மாணவர்களாவர். இவ்விடயம் மிக முக்கிய கவனத்திற்கொள்ளவேண்டிய விடயமாக அமைகின்றது என்றார்.

எஸ் தில்லைநாதன்