
posted 14th November 2021
நாடறிந்த கவிஞர் மறைந்த பாண்டியூரனின் கவிதைகள் அடங்கிய “பாண்டியூரன் கவிதைகள்” நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று (14.11.2021) ஞாயிறு மாலை கல்முனையில் நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தில் வாழ்த்த, வாழ்கின்ற பிரபலமான எழுத்தாளர்களின் பலகாத்திரமான நூல்களைத் தெரிவு செய்து நூலுருவில் பதிப்பிக்கும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர், சரவண முத்து நவநீதனின் முன்மாதிரி செயற்திட்டத்தின் கீழ் இந்த நூல் வெளியீடு இடம் பெற்றது.
உலகறிந்த எழுத்தாளரும், பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலைய ஆலோசகருமான உமா வரதராஜன் தலைமையில், கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை நல்ல தம்பி மண்டபத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீஸன், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர், ரி.ஜெ.அதிசயராஜ் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து கொண்டதுடன்.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் சரவண முத்து நவநீதன் “பாண்டியூரன் கவிதைகள்” நூலை சம்பிரதாய பூர்வமாக வெளியிட்டு வைத்து, சிறப்புப் பிரதிகளையும் வழங்கி வைத்தார்.
பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் நிகழ்வில் உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் முன்னுரிமை அளிக்கும் பணிகளில் கிழக்கு மாகாண எழுத்தாளர்களின் தேர்ந்தெடுத்த படைப்புகளுக்கு நூல் வடிவமளிப்பதும் ஒன்றாகும்.
அந்த வகையில் சகல எழுத்தாளர்களதும் காத்திரமான படைப்புக்களை, நல்ல படைப்புக்களை நூலுருவில் கொண்டுவரும் பணியை நாம் தொடரவுள்ளோம்.
இரு வருடங்களில் இதுபோல் வரலாறு, ஆய்வு, நாவல் என 22 நூல்களை வெளியிட்டுள்ளோம். 100 சிறுகதைகளைத் தொகுத்து 890 பக்கங்கள் கொண்ட நூலாக மேலும் ஒரு நூலை அடுத்த வாரம் திருமலையிலும், கல்முனையிலும் வெளியிடவுள்ளோம்.
நல்ல ஆக்கங்களை நூலுருவில் கொண்டுவரும் பணியைத் தொடர்வோம்.
சிங்கள மொழி நாவல் நூல் ஒன்றை தமிழில் மொழி பெயர்க்கவும், தமிழ் நாவலை சிங்கள மொழியில் மொழி பெயர்ப்பதற்கான நூல்களின் பதிப்பித்தல் நடவடிக்கைகளும் இடம் பெற்று வருகின்றன. என்றார்.
பிரபல எழுத்தாளர் உமா வரதராஜன், பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா, கவிஞர் “மலரா’ டாக்டர். புஸ்பலதா லோக நாதன், ஆலோசகர் சபா, சபேசன், உபதலைவர் பா.செ.புவிராஜா, பிரதிப் பதிவாளர் சஞ்சீவிசிவகுமார், செயலாளர் சி.புனிதன், செல்வி. நடேசன் கௌசிகா ஆகியோரும் உரையாற்றினார்.
சிரேஷ்ட ஊடகவியலாளரும், கவிஞருமான செல்லையா பேரின்பராசா நிகழ்ச்சிகளைச் சிறப்புற தொகுத்து வழங்கினார்.

ஏ.எல்.எம்.சலீம்