
posted 2nd November 2021
சாவகச்சேரியில் கழிவுகளை மீள் உருவாக்கும் மத்திய நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 02/11/2021 செவ்வாய்க்கிழமை காலை 11மணிக்கு தனங்கிளப்பு வீதியில் அமைந்துள்ள நகரசபையின் கழிவகற்றல் மையத்தில் இடம்பெற்றது.
சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக செவணத நிறுவன முகாமையாளர் அப்துல் ரணசிங்க, வேள்ட் விஷன் நிறுவன அதிகாரி நிமல் பிரேமதிலக ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த வளங்கள் சுத்திகரிப்பு நிலையமானது ஜேர்மன் நாட்டின் BMZ நிறுவன நிதி உதவி மற்றும் ஜேர்மன் வேள்ட் விஷன் நிறுவனத்தின் உதவியுடன் சாவகச்சேரியில் செவணத்த மற்றும் வேள்ட் விஷன் நிறுவனங்களால் "பின்லா" கழிவு முகாமைத்துவச் செயற்திட்டத்தின் கீழ் 18மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்டள்ளது.
மேலும் அடிக்கல் நாட்டு வைபவத்தில் நகரசபையின் உத்தியோகபூர்வ சட்டத்தரணி,நகரசபையின் உப தவிசாளர் பாலமயூரன்,பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தளிர்ராஜ், நகரசபை உறுப்பினர்கள்,உத்தியோகத்தர்கள் மற்றும் செவணத,வேள்ட் விஷன் நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

எஸ் தில்லைநாதன்