
posted 7th November 2021

கந்தசஷ்டி விரதம் காலா காலமாக அநேக பக்தர்களால் மிகவும் பக்திபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் அனுஷ்டித்து வருகின்ற ஒரு புனிதமான விரதமாகும். கந்தஷஷ்டியை கருத்தில் கொண்டு அதற்கு முன்வரும் ஐந்து நாள்களிலும் ஒரு நேரம் மட்டும் உணவு எடுப்பவர்கள், உணவே எடுக்காமல் ஒருநேரம் மட்டுமு் பாலோ, பழகோ எடுப்பவர்கள், இன்னும் கோயிலில் வழங்கப்படுமு் பானகத்தையோ, தீர்த்தத்தையோ ஒரு நேரம் மட்டும் அருந்தி விரதமிருப்பவர்கள், ஆறுநாளும் எதுவுமே சாப்பிடாமல் உபவாசமிருப்பவர்கள் என்று எல்லா விரதமனுஷ்டிக்கும் பக்தர்கள் அனைவரும் ஷஷ்டி முடித்து அடுத்தநாள் காலை அதாவது சூரன்போர் முடித்து அடுத்தநாள் காலை விரதத்தைப் பூர்த்தி செய்து பாறணை பண்ணுவது வழமை. ஆனால் இம்முறை பக்தர்களின் மனதை புண்படுத்துவது போலவும் அவர்களுடைய விரதத்தை கருத்திற்கொள்ளாமலும் சில ஆலயங்கள் கந்தஷஷ்டி 05ஆம் நாளாகிய 09.11. 2021 செவ்வாய்க்கிழமை சூரன்போர் நடத்த முன்வந்துள்ளதால் விரதத்தின் தன்மை என்னாவது என்று கலங்கி நிற்கும் பக்தர்களுக்கு இறைவன்தான் ஆறுதல் கூறவேண்டும்.
கந்தஷஷ்டி விரதத்தை தேவர்கள் அனுஷ்டித்து முருகப் பெருமானால் அசுரர்களின் ஆணவம், அகங்காரம், அழிக்கப்பட்டது. எனவே இந்த விரதத்தின் பிரதான நோக்கமான ஆணவ, அகங்காரங்களை அழித்து ஏற்கனவே மாறாத துன்பத்திலும், துயரத்திலும் துவண்டுபோய் இறைவனே கதி என்று நம்பி வரும் பாமர மக்களை அவதியடையச் செய்யாதீர்கள், பூசைகள், விரதங்கள் எல்லாம் ஒவ்வொருவரின் இஷ்டப்படி செய்வதாக இருந்தால் இவற்றால் நன்மை வருவதற்குப் பதிலாக தீமைகளே பெருகும்.
ஓர் ஆலயம் கும்பாபிஷேகம், உற்சவம் முதலியவற்றை ஒருபஞ்சாக்கத்தின்படி கைக்கொண்டு வந்தால் அந்தப் பஞ்சாக்கத்தில் விரதமுறை எப்படிப் குறிப்பிட்டுள்ளதோ அதையே கைக்கொள்ள வேண்டும். அதைவிட்டுவிட்டு மக்களுக்கு திதி பார்க்க ஒரு பஞ்சாங்கம், தம்முடைய பிற வேலைகளுக்கு பங்கம் வராமல் அடுத்தவர்களுக்கு திருமணநாள், கிரகப்பிரவேச நாள் பார்ப்பதற்கு ஒரு பஞ்சாங்கம் என்று ஒரு நியதி இல்லாமல் தாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவதை தயவுசெய்து நிறுத்துங்கள்.
ஒவ்வொரு வருடமும் வருட ஆரம்பத்திலேயே பஞ்சாங்கங்கள் வந்துவிடும். ஆனால் நவராத்தி விரதம், கந்தஷஷ்டி விரதம் தொடங்குவதற்கு முதல்நாள்தான் அந்த விரதநாள்களில் உள்ள குறைபாடுகள் பற்றி பத்திரிகைகளில் யாராவது இரு சாரார் விவாதித்துவிட்டு சில ஆலயங்கள் ஒரு நாளும் வேறு சில ஆலயங்கள் இன்னொரு நாளும் எந்தவொரு முன்னறிவித்தலின்றி தொடங்கி விடுவார்கள்.
ஆலயத் திருப்பணிக்கும், தொண்டுகளுக்கும், வருமானத்துக்கும் தேவைப்படும் பாமரமக்களுக்கு, விரதங்களை அனுஸ்டிக்கும் மக்களுக்கு முன்கூட்டியே தெளிவுபடுத்தவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு தோன்றுவதில்லை.
மக்களை அறநெறியில் வழிப்படுத்தவேண்டியது ஆலயங்களினதும் குருமார்களினதும் ஆலய பரிபாலன சபைகளினதும் தலையாய கடமையாகும்.
மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் கடமையைச் செய்யுங்கள்
ஆலயங்களுக்கு என்று இருக்கும் மரபு வழி முறைகளை நினைத்தபடி மாற்றாதீர்கள்
பிழையான ஒரு காரியத்தைச் செய்து புண்ணியத்துக்குப் பதிலாக பாவத்தை தேடாதீர்கள்
நியதியோடு இருக்கும் விரத்தைக் குழப்பி விரதம் இருக்கின்ற அடியார்களின் மனதைக் கலங்கவிடாதீர்கள்
கொள்கையோடு இருங்கள், நன்மையே செய்யுங்கள்*
சதா. இராதாகிருஷ்ணக் குருக்கள்

எஸ் தில்லைநாதன்