
posted 8th November 2021
கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள கரையோரப்பிரதேசங்கள் கடலரிப்பினால் பாதிக்கப்படும் நிலமை ஏற்பட்டுள்ளது.
தற்பொழுது நிலவும் தொடர்ச்சியான அடை மழை காரணமாக கடல் பெருக்கமும், கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ள அதே வேளை கடலரிப்பும் உக்கிர மடைந்துள்ளது.
குறிப்பாக ஒலுவிலில் துறை முகம் அமைக்கப்பட்டதன் காரணமாக ஒலுவில் பிரதேசம் உட்பட அயல் பிரதேசங்களான மாட்டுப்பளை, அட்டப்பள்ளம் உட்பட முக்கியமாக நிந்தவூர்ப் பிரதேசம் கடலரிப்பினால் பெரும்பாதிப்பை எதிர்நோக்கிவருகின்றது.
அதேபோல் பாண்டிருப்பு பிரசேதத்திலும் தற்பொழுது கடலரிப்பு ஏற்பட்டு பாதிப்புக்களை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
மேலும் மேற்படி பிரதேசங்களில் ஏற்பட்டுளள் கடலரிப்பு காரணமாக கடற்கரையை அண்டிய பிரதேசங்களிலுள்ள கட்டிடங்கள், தென்னம் தோட்டங்கள் மட்டுமன்றி சில நெற்காணிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை கரைவலை மற்றும் ஆழ் கடல் மீன்பிடியாளர்களும் இதனால் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக தமது தோணிகள், இயந்திரப் படகுகளை மீன்பிடி நடவடிக்கைக்கு எடுத்துச் செல்வதிலும், தோணி படகுகளை கரையில் நிறுத்தி வைப்பதிலும் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒருவார காலத்திற்கும் மேலாகத் தொடரும் சீரற்ற காலநிலையால் கடலரிப்பு உக்கிரமடைந்துள்ளதால் கடல் மீன் பிடியும் தடைப்பட்டு மீனவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கடலரிப்பு அனர்த்தத்திற்கு சம்பந்தப்பட்டோர் நிரந்தர தீர்வு காண்பதில் அசமந்தமாக விருந்தால் பல பிரதேசங்கள் கடலால் காவு கொள்ளப்படும் அபாய நிலையே ஏற்படுமென பொது மக்கள், மீனவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம்