
posted 12th November 2021
பொது பலசேனவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரின் தலையிலான ஒரே நாடு ஒரே சட்டம் குழு ஒறுப்பினராகஇ ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பொருளாளர் கலீல் ரஹ்மான் நியமிக்கப்பட்டமை தொடர்பில் அக்கட்சிக்குள் ஒரே கருத்து இல்லையா? என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் முஹம்மது சதீக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு இது விடயமாக விடுத்துள்ள அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொருளாளர் கலீல் ரஹ்மான், ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்ட உறுப்பினராக நியமிக்கப்பட்டமைக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லையாயின் ஒன்றில் அவர் செயலணியில் இருந்து விலக வேண்டும் அல்லது கட்சியில் இருந்து விலக வேண்டும் அல்லது கட்சி அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதை விடுத்து தமது கட்சி பொருளாளரை ஞானசார தலைமையின் கீழ் செயல்படுவதை பார்த்திருப்பது என்பது ஐக்கிய சமாதான கூட்டமைப்பு ஜனாதிபதியின் இந்த செயலணியையும் ஞானசாரவின் தலைமையையும் ஏற்றுக்கொண்டதாகவே ஆகும்.
கலீல் ரஹ்மான் நியமிக்கப்பட்டமை சம்பந்தமாக கட்சியின் தலைவர் ஹசனலி ஒரு கருத்தும் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ரவூப் ஹக்கீம் போன்று புரியாத பாஷையில் இன்னொரு கருத்தும் கட்சியின் உறுப்பினர் இப்லால் மௌலவி மற்றுமொரு கருத்தும் சொல்லிக்கொண்டிருப்பதன் மூலம் இவர்களிடம் இது பற்றி ஒற்றுமையான கருத்து இல்லை என்றே தெரிகிறது.
எமது கட்சியை பொறுத்தவரை ஜனாதிபதி அவர்கள் ஞானசார தலைமையில் முஸ்லிம்கள் சிலரையும் நியமித்ததை ஏற்றுக்கொண்டுள்ளோம். இச்செயலணி மூலம் ஒரே நாடு ஒரே சட்டம் கேலிக்கூத்தான கோஷமாக நிரூபிக்கப்படும் என்பதே எமது கருத்தாகும்.
ஜனாதிபதி செயலணியை கண்டிக்கும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு தனது பொருளாளரை அச்செயலணியில் இருந்து நீக்க முயற்சிக்காவிட்டால் அக்கட்சியும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளது என்றே அர்த்தமாகும்.”
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏ.எல்.எம்.சலீம்