
posted 23rd November 2021

இலங்கைத் தமிழ்ப் பத்திரிகை மூத்த ஆசிரியர் ம . வ . கானமயில்நாதன்
இலங்கைத் தமிழ்ப் பத்திரிகை மூத்த ஆசிரியர்களில் ஒருவரான உதயன் நாளிதழின் முன்னாள் பிரதம ஆசிரியரான ம வ கானமயில்நாதன் நேற்று திங்கட்கிழமை அதிகாலை
யாழ்ப்பாணத்தில் காலமானார். வட்டுக்கோட்டை மேற்கைச் சேர்ந்த இவருக்கு 79 வயதாகும்.
1964 இல் யாழ் தொழில் நுட்பக் கல்லூரியில் பொறியியல் பிரிவில் கற்றுக்கொண்டிருந்தவேளை யாழ்ப்பாணத்தில் வெளிவந்து கொண்டிருந்த ஈழநாடு தினசரியில்ஆசிரிய பீடத்தில் இரவு நேரப்பணியில் ஈடுபட்டு பத்திரிகைத்துறையில் அறிமுகமானார்.
1966 இல் கொழும்பில் புதிதாக உருவான சுயாதீன பத்திரிகா சமாஜத்தின் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளில் உதவி ஆசிரியராக இணைந்து கொண்டார். இந்நிறுவனத்தில் மிகக்
குறுகிய காலங்களில் பிரதம உதவி செய்திஆசியராகவும் செய்தி ஆசிரியராகவும் பதவி நிலைக்கு உயர்ந்தார்.
1983 இனக்கலவரத்துடன் தினபதி நிறுவனத்தில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த இவர், வீரகேசரி நிறுவனத்தின் யாழ் கிளை அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்ட யாழ் செய்திப் பிரிவுக்குட்பட்ட பொறுப்பாக நியமனம் பெற்றிருந்தார். அக்காலத்தில் அவருக்குக் கீழ் நானும், நண்பர்கள் அரசரத்தினம், அமரர் நடனசிகாமணி ஆகியோர் பணியாற்றியிருந்தோம்.
அதன் பின்னர்1985 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கபட்ட உதயன் நாளிதழின் பிரதம ஆசிரியராகப் பொறுப்பேற்று 35 ஆண்டுகளுக்கு மேலாகப்பணியாற்றி ஓய்வு பெற்றார்.
அதேவேளையில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட
காலைக்கதிர் பத்திரிகையிலும் சில ஆண்டுகள் பிரதம ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்று யாழ் நாவகல்வீசியதில் வாழ்ந்து வந்திருந்த வேளையில் காலமானார்.

எஸ் தில்லைநாதன்