
posted 8th November 2021
சீரற்ற காலநிலை நீடிப்பதனால், யாழ்.மாவட்ட கடற்பகுதி கொந்தளிப்பாக காணப்படுகிறது, அதேவேளை, கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம். என யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கோரியுள்ளார்.
மாவட்டச் செயலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு அவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
யாழ்.மாவட்டத்திலே வடகிழக்கு பருவப் பெயர்ச்சி காலநிலை ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் யாழ்.மாவட்டத்திலே மழை பெய்து வருகின்றது. கடந்த 6ஆம் திகதி 33.5 சதவீத மழை யாழ்.மாவட்டத்திலே பெய்துள்ளது.
இருந்தபோதிலும் ஏனைய மாவட்டங்களில் இந்த மழைவீழ்ச்சி சற்று அதிகமாக இருந்ததுடன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையும் அவதானிக்க முடிந்தது. அவ்வாறான வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலைமை யாழ்.மாவட்டத்தில் இன்னும் ஏற்படவில்லை.
இருந்தபோதும் எதிர்வரும் 24 மணிநேரத்துக்குள், இலங்கையின் தென்கிழக்குப் பக்கத்திலே ஏற்பட்டிருக்கும் தாழமுக்க நிலையானது மேலும் வலுப்பெற்று நகரும்போது யாழ்.மாவட்டத்துக்கும் அந்த மழைவீழ்ச்சி கிடைக்கக்கூடிய சாத்தியமுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எமக்கு அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையிலே கடற்சீற்றம் சற்று அதிகமாக இருக்கக்கூடிய நிலை உள்ளது. ஆகவே கடற்றொழிலாளர்களை கடலுக்கு செல்லவேண்டாம் என கூறுகின்றோம்-என்றார்.

எஸ் தில்லைநாதன்