
posted 21st November 2021
அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவர் என்று ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் ஞானசார தேரர் உறுதியளித்தார் என்று முன்னாள் அரசியல் கைதி செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியுடன் வவுனியாவில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னரே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், ஞானசாரர் தலைமையில் இடம் பெற்ற இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடலில் அரசியல் கைதிகளின் விடுதலை, தொல்பொருள் திணைக்களஙகளின் நடவடிக்கை, பௌத்த விகாரைகள் அமைக்கப்படுதல், எமது மத வழிபாடுகள் மறுக்கப்படுதல் தொடர்பான பிரச்னை, மாவீரர் தினம் தொடர்பில் எமது உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்பான பிரச்சனை தொடர்பில் நான் பேசியிருந்தேன்.
அப்போது அவரிடம் இருந்து வந்த பதிலில் அரசியல் கைதிகள் தொடர்பாக உள்ளே இருப்பவர்கள் தொடர்பில் ஜனாதிபதி சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பேசியுள்ளார். மிக விரைவில் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். இது தொடர்பில் ஜனாதிபதி தன்னிடமும் தெரிவித்தாரெனவும் கூறினார்.
மாவீரர் தினம் தொடர்பில் கேட்டிருந்தேன். பல்வேறு காலங்களிலும் மரணித்த மாவீரர்களை நினைவு கூர உரிமை உள்ளது எனத் தெரிவித்தேன். படுகொலைகள் பல நடந்தன. அதனை நாம் அன்றாடம் நினைவுகூர முடியாது. இதனை ஒரே வாரத்தில் செய்கின்றோம் என தெரிவித்தேன். இதன்போது இந்த விடயம் தொடர்பில் தான் முழுமையாக பதில் செல்ல முடியாது எனவும், இருந்தாலும் விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக மேற்கொண்ட விடயம் தவறு. அதற்கு அனுமதிக்க முடியாது. உங்களுடைய வலிகள், பிரச்னைகளை புரிந்திருந்தாலும் இதற்கான பதிலை வழங்கக் கூடிய நிலையில் இல்லை. எங்களுடன் சேர்ந்து இவற்றை மறந்து நீங்கள் பயணிக்க வேண்டும். இதைவிட பிரச்னையான பல விடயங்கள் இருக்கின்றன. சாப்பாடு இல்லை, வீடு இல்லை, தண்ணீர் இல்லை இவை பற்றி நாம் பார்ப்போம் எனத் தெரிவித்தார் என்றார்.

எஸ் தில்லைநாதன்