
posted 29th November 2021
இலங்கையில் பல பிரதேசங்களிலும் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கடும்மழை பெய்துவருகிறது. அதன் தொடர்ச்சியாக வடமாணத்திலும் மழை பெய்து வருகிறது. இதனால் கிளிநொச்சி மாவட்டத்தின் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள 9 பெரிய மற்றும் நடுத்தர குளங்களில் அக்கராயன் குளம் தவிர்ந்த ஏனைய குளங்கள் அனைத்தும் அதன் நீர் கொள்ளவு அடைவு மட்டத்தை அடைந்து வான் பாய்கின்றன.
25அடி நீர்கொள்ளவு கொண்ட அக்கராயன் குளத்தின் நீர்மட்டம் 24 அடி 5 அங்குலம் ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன் அக்கராயன் பிரதேசத்தில் 38.9 மில்லி மீற்றர் மழையும் நாகபடுவான் பிரதேசத்தில் 34.2 மில்லி மீற்றர் மழையும் நேற்று முன்தினம் பதிவானமை குறிப்பிடத்தக்கது.
கடும்மழையினால் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய குளமான இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டமையால் முரசுமோட்டை, பன்னங்கண்டி, கண்டாவளை, வட்டக்கச்சி ஆகிய பகுதிகளின் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இரணைமடுக் குளத்தின் நான்கு வான் கதவுகள் இன்று காலை திறக்கப்பட்டன.
தற்போது குளத்தில் இருந்து வெளியேறுகின்ற நீர் கனகராயன் ஆறு வழியாக கடலைச் சென்றடைகின்றது. இதன் காரணமாக, கனகராயன் ஆற்றுப் பக்கமாக தேவையற்ற முறையில் எவரும் செல்ல வேண்டாம். குறிப்பாக, சிறுவர்கள் புதினம் பார்ப்பதற்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கூடுதலான மழை வீழ்ச்சி பதிவாகி, இரணைமடுக் குளத்தின் ஏனைய வான் கதவுகளும் திறக்கப்படும் சந்தர்ப்பங்களில், தாழ் நிலப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் ஆண்டு தோறும் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி நகர்வது போன்று, கூடுதலான மழை வெள்ளம் வருகின்ற போது தற்காப்பு நிலையில் இருக்குமாறும், அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்