அதிபர், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வினை வலியுறுத்தி இன்றும் (செவ்வாய், 09.11.2021) நாடளாவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

சுபோதினி அறிக்கையை இலக்காகக் கொண்டும், அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்த்து வைக்கவும் அரசு உடன் முன்வர வேண்டுமெனக் கோரியும் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

எதிர்வரும் 12 ஆம் திகதி அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் தமது சம்பள முரண்பாட்டுத் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இன்றைய போராட்டம் இடம்பெற்றது.

கூட்டிணைந்த தொழிற் சங்கங்களின் ஏற்பாட்டில், இன்று நாடளாவிய ரீதியில் இதற்கான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

இதன் பிரகாரம் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகம் முன்பாக, இன்று பாடசாலை கடமைகள் முடிந்ததன் பின்பாக இடம்பெற்றது. இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்தொகையான அதிபர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர்,

“சுபோதினி அறிக்கையே எமது இலக்கு,”

“5000 ரூபா கொடுப்பனவுக்கு அலைபவர்களா ஆசிரியர்கள்?”

“எம்மை ஆர்ப்பாட்டக் காரர்களாக்கியது யார்?”

“ஏமாற்றும் எண்ணம் இல்லையாயின் ஏன் இந்த இழுத்தடிப்பு?”

“மாணவர் கல்வியை பாதுகாப்போம்”

“ஜனாதிபதி அவர்களே எமது பிரச்சினைக்கு செவிமடுங்கள்”

என்பன போன்ற வாசகங்களைக் கொண்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பினர்.

சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்த இந்த ஆர்ப்பாட்த்தின் இறுதியில் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத் தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா கருத்து வெளியிடுகையில்,

“கடந்த 24 வருட காலமாக எமது சம்பள முரண்பாட்டு பிரச்சினை மாறி மாறி வந்த அரசுகளால் இழுத்தடிக்கப்பட்டே வருகின்றது.

இதனால் ஆசிரிய சமூகம் ஏமாற்றப்பட்டே வருவதுடன், ஆசிரிய சமூகத்தை அரசு கேவலமாகவுமே நடத்தி வருகின்றது.

எமது பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நிதி இல்லையெனக் கூறும் நிலையில் இந்த அரசின் அமைச்சர்கள் சுகபோகம் அனுபவிப்பதற்கு எவ்வாறு நிதி வசதிகள் கிடைத்ததோ புரியவில்லை. ஆனாலும் 24 மணி நேரமும் மாணவர்கள் பற்றிய சிந்தனையுடனேயே ஆசிரிய சமூகமுள்ளது. இதன் காரணமாகவே கொவிட் - 19 பரவலுக்கு மத்தியிலும் பொதுப்பரீட்சைகளில் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

எனவே அரசு உடனடியாக எமக்கு சிறந்த தீர்வை வழங்க வேண்டும்” என்றார்.

அதிபர், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஏ.எல்.எம்.சலீம்