அஞ்சல் சேவையின் சிறப்பு

“கிழக்கு மாகாணத்தில் அஞ்சல் சேவைகள் சிறப்புற இடம்பெற்று வருகின்றன. தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்பும், சிறந்த ஆலோசனைகளும் இச்சிறப்பான சேவைகளுக்கு வலுவூட்டியுள்ளன.”

இவ்வாறு, அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 14 ஆவது வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய, கிழக்கு மாகாண பிரதி அஞ்சல்மா அதிபர் திருமதி. ஜெயானந்தி திருச்செல்வம் கூறினார்.

சங்கத்தலைவரும், தொழிற்சங்க வாதியுமான நிந்தவூர் பிரதம தபாலதிபர் யூ.எல்.எம்.பைஸரின் நெறிப்படுத்தலிலும், தலைமையிலும் கூட்டம் நடைபெற்றது.

மாளிகைக்காடு, பாவாறோயல் வரவேற்பு மண்டபத்தில், கொவிட் - 19 சுகாதார வழிமுறைகளுக்கமைய கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், அம்பாறை – அக்கரைப்பற்று அஞ்சல் அத்தியட்சகர் ஆர்.எம்.ஆர்.ஹேமந்த உட்பட திணைக்கள உயரதிகாரிகள் பலரும் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

மேலும் கூட்டத்தில் அம்பாறை அக்கரைப்பற்று அஞ்சல் அத்தியட்சகர் ஹேமந்தவின் சேவைகளை பாராட்டி கௌரவிக்கும் சிறப்பு நிகழ்வும் இடம்பெற்றதுடன், சங்கத்தின் வருடாந்த வெளியீடான யூ.பி.டி.ஓ செய்தி இதழின் சிறப்பு வெளியீடும் இடம்பெற்றது.

பிரதி அஞ்சல் மாஅதிபர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.

“அஞ்சல் திணைக்கள சேவைகள் சமூகத்தில் பெருமுக்கியத்துவம் பெற்றுத் திகழ்வதுடன், மக்களுக்கான சிறந்த சேவைகளையும் ஆற்றிவருகின்றது.

பல்வேறு இக்கட்டான காலகட்டங்களில் கூட அஞ்சல் சேவை உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் பணி விதந்து பாராட்டப்படுகின்றது.

கடமை உணர்வும், தியாக மனப்பாங்கும் கொண்ட எமது சேவையாளர்களின் பணிதிணைக்களத்திற்குப் பெருமை சேர்த்து வருகின்றது.

குறிப்பாக உப தபாலதிபர்கள் மற்றும் பணியாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

இவற்றிற்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுப்போம்.

இத் தொழிற்சங்கத்தின் சிறந்த செயற்பாடுகளை நாம் வரவேற்றுப் பாராட்டுவதுடன், இதற்கு வலுவூட்டி உறுதுணையாகத் திகழும் புதிய தலைவரும், முன்னாள் செயலாளருமான தபாலதிபர் யூ.எல்.எம்.பைஸர் அவர்களை இச்சந்தரப்பத்தில் பாராட்டவும் கடமைப்பட்டுள்ளோம்” என்றார் சங்கத்தின் நடப்பு வருட புதிய உத்தியோகத்தர் தெரிவும் கூட்டத்தில் இடம் பெற்றதுடன்,
வருடாந்தக் கூட்ட முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

அஞ்சல் சேவையின் சிறப்பு

ஏ.எல்.எம்.சலீம்