
posted 14th November 2021
மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த குடும்பஸ்தருக்குக் கொரோனா நோய்த் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை, அராலி மேற்கைச் சேர்ந்த 34 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.
அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா நோய்த்தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவருக்கு கடந்த சில நாள்களாகத் தடிமன் மற்றும் காய்ச்சல் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் வட்டுக்கோட்டை பிரதேச மருத்துவமயைில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக சங்கானை ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா நோய்த்தொற்று இல்லை என வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில், நேற்றுமுன்தினம் காலை ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக அவர் வட்டுக்கோட்டை பிரதேச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.
சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவருக்குக் கொரோனா நோய்த்தொற்றுள்ளமை நேற்று மாலை உறுதிப்படுத்தப்பட்டு அறிக்கையிடப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்