
posted 22nd November 2021
அரியாலை கடற்பரப்பில் டிங்கி படகு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 229 கிலோ கிராம் கேரள கஞ்சாவை மீட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கடற்படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,
கடல் வழியாக போதைப் பொருள்கள் உட்பட பல்வேறு கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்க கடற்படையினர் நாட்டின் கரையோரங்களில் வழக்கமான சுற்றுக்காவல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி, வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தின் சிறப்புப் பிரிவு நேற்று காலை அரியாலைப் பகுதி மற்றும் அதனைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் சிறப்புத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.
கடற்படை நடவடிக்கை காரணமாக கரைக்கு கொண்டு வர முடியாது கைவிடப்பட்ட டிங்கி படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 பைகளில் 105 பொதிகளில் இடப்பட்டிருந்த 229 கிலோ 350 கிராம் கேரள கஞ்சாவை கடற்படையினர் மீட்டனர்.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் தற்போதைய பெறுமதி 6 கோடியே 80 இலட்சம் ரூபாய்க்கும் அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன்