
posted 2nd November 2021
இந்த நாட்டின் அரசியல் சாசனத்தில் அமைந்திருக்கும் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விரைவாக நடத்தப்பட வேண்டும். எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளும் கலந்து கொள்ளக்கூடியதாக எமது அடுத்த சந்திப்பு அடுத்த இருவாரங்களுக்குள் நடாத்தப்படும் என ஏழு கட்சிகளின் தலைவர்கள் ஒருமித்த நிலையில் தீர்மானித்துள்ளனர்.
13 ஆம் திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக அது ஆரம்ப கட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே நடைமுறைப்படுத்தப்படுவதற்கு இந்திய அரசாங்கத்தை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கான கலந்துரையாடல் ஏழு கட்சியின் தலைவர்கள் ஆராய்வதற்காக செவ்வாய் கிழமை (02.11.2021) யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் ஒன்று கூடினர்.
இக்கூட்டத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம், சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டனி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டனி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி, தமிழ் தேசியக் கட்சி ஆகிய தலைவர்கள் இவ் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் இவர்கள் ஒருமித்து எடுக்கப்பட்ட தீர்மானமாக;
தமிழ் பேசும் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்துவரும் அரசியல் தீர்வு என்பது அவர்களின் அரசியல் அபிலாசைக்களைத் திருப்திப்படுத்தக்கூடிய முறையிலேயே அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தும் அதேவேளையில், எமது மக்கள் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டு பின்வரும் தீர்மானங்களை, அவை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு நாம் முன்வைக்கின்றோம் என தெரிவித்த நிலையில் பின்வரும் தீர்மானங்களை எடுத்துள்ளனர்.
1. இந்த நாட்டின் அரசியல் சாசனத்தில் அமைந்திருக்கும் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
2. அத்துடன் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விரைவாக நடத்தப்பட வேண்டும்.
3. அரசாங்கத்தினாலும் அரசாங்க ஆதரவுடனும் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட காணி அபகரிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
4. பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு அதன் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
5. பல்லின. பல்மொழி, பல்மத மக்கள் வாழும் இந்த நாட்டில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாட்டை முன்னெடுப்பதற்கும் நடைமுறைப்படுத்துவதற்குமாக அமைக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி செயலணி மக்களுக்கிடையில் ஒற்றுமையின்மையையும், பிரிவினையையும் ஏற்படுத்தக்கூடிய பாரிய ஆபத்தைக் கொண்டிருப்பதால் அதனை திட்டவட்டமாக நாம் நிராகரிக்கின்றோம்.
எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளும் கலந்து கொள்ளக்கூடியதாக எமது அடுத்த சந்திப்பு அடுத்த இரு வாரங்களுக்குள் நடாத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ