
posted 24th November 2021
இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டதனாலேயே, யுத்தம் முடிவடைந்தும் இந்த நாடு இன்னும் முன்னேற்றம் அடையாதிருப்பதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
செவ்வாய் கிழமை (23) பாராளுமன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
“ஜனாதிபதி அவர்களின் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் தொடர்பாக ஒரு விடயத்தை நான் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அதாவது, இனங்களுக்கிடையே உறவுப் பாலத்தை ஏற்படுத்துவதன் மூலமே இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் இனங்களுக்கிடையே நல்லுறவும், முறையான சட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுவதோடு, மதங்களுக்கு மதிப்பளிப்பதன் காரணமாகவே அந்த நாடுகள் அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளன.
இலங்கையிலே அத்தனை வளங்கள் இருந்த போதும், இனங்களுக்கிடையிலே முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டதனாலேயே, முப்பது வருட யுத்தம் இடம்பெற்றது. அதுபோன்று, கடந்த பத்து வருடங்களாக முஸ்லிம்களை குறிவைத்து தாக்குதல் மற்றும் அடாவடித்தனங்கள் இடம்பெற்றன.
இதன் தொடர்ச்சியாகவே, பயங்கரவாதி சஹ்ரானின் கேடுகெட்ட செயல்களால் சமூகங்கள் மேலும் துருவப்படுத்தப்பட்டன. இந்த தாக்குதலின் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆணைக்குழு ஒன்றை நியமித்தார். அந்த ஆணைக்குழு அறிக்கையின் படி தாக்குதலுக்கான பத்துக் காரணங்கள் வெளிப்படுத்தப்பட்டன. பயங்கரவாதிகள் கூறிய காரணங்களை ஏற்றுக்கொண்டு, அதனை நான் இங்கு நியாயப்படுத்த வரவில்லை. இந்தத் தாக்குதலில் சூத்திரதாரி உட்பட இதில் ஈடுபட்டவர்கள், உதவி செய்தவர்கள் அத்தனை பேரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
அந்த ஆணைக்குழு அறிக்கையில், முதலாவது இடத்தில் சொல்லப்பட்டவாறு அல்லாஹ்வை ஏசியதாலும், மூன்றாவது இடத்தில் சொல்லப்பட்டவாறு “அல்லாஹ் மீண்டும் பிறப்பார்” என்று ஞானசார தேரர் கூறுகிறார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறான ஒருவரை “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணிக்கு தலைவராக நியமித்திருக்கின்றார்கள். எனவே, அந்த செயலணியின் தலைவர் பதவியிலருந்து அவரை நீக்கி, சிறந்த மதகுரு ஒருவரை அல்லது புத்திஜீவி ஒருவரை நியமிக்க வேண்டுமென கோருகின்றேன்” என்றார்.

ஏ.எல்.எம்.சலீம்