‘இதுவும் கடந்து போகும்' என்னும் நம்பிக்கையில் இறைவனைப்பற்றிக் கொள்வோம் - ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை

கொரோனா தொற்று நோயாலும் இன்றைய ஆட்சியாளர்கள் மட்டில் பொதுவாக மக்கள் கொண்டிருக்கும் அதிருத்தி காரணமாகவும் இன்றைய சூழ்நிலை மிகவும் கவலைக்குரியாகவே உள்ளது. 'இதுவும் கடந்து போகும்' என்னும் நம்பிக்கையில் இறைவனைப் பற்றிக்கொண்டு தொடர்ந்து நமது முயற்சிகளை முன்னெடுப்போம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு பிடேலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை மன்னார் மறைமாவட்ட மக்களுக்கு திருவருகைக்காலத் திருமடலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் மன்னார் மறைமாவட்ட மக்களுக்கு திருவருகைக்காலத் திருமடலில் தொடர்ந்து தெரிவித்திருப்பதாவது;

கத்தோலிக்க திருச்சபையில் திருவருகைக்காலம் ஆண்டவர் மக்களை சந்திக்க வரும் அருமையான காலமாக அமைகின்றது.

அதாவது இயேசு தூய கன்னிமரியின் திருவயிற்றில் அவதரித்து ஒரு குழந்தையாக கிறிஸ்மஸ் நாளில் பிறந்த அவரது வருகையாகவும், இரண்டாவது வருகை நடுத்தீர்வை நாளில் வாழ்வோரையும் இறந்தோரையும் தீர்ப்பிட மாட்சியோடு வரவிருக்கும் வருகையாகவும் இருக்கின்றது.

உலகளாவிய உயிர்கொல்லியாக உருவெடுத்துள்ள கோவிட் 19 என்ற கொரோனா வைரசின் பிடியிலிருந்து உலகமும் நாமும் இன்னமும் விடுபடவில்லை.

எதிர்பார்த்தைவிட மேலாக இதன் தாக்கமும் காலமும் நீண்டு கொண்டே செல்லுகின்றது. ஆகவே இதிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள முதலில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றியவர்களாக இருக்க வேண்டும்.

இதற்கான தடுப்பூசிகள் கட்டம் கட்டமாக போடப்பட்டாலும் இன்னும் இதன் செயல்முறை நிறைவுக்கு வரவில்லை.

பாடசாலைகள், மத வழிபாட்டுத்தளங்கள் இன்னமும் முற்று முழுதாக செயல்படவில்லை. நாம் தொடர்ந்து அசௌரியங்களையே எதிர்நோக்குகின்றோம்.

'இதுவும் கடந்து போகும்' என்னும் நம்பிக்கையில் இறைவனைப் பற்றிக்கொண்டு தொடர்ந்து நமது முயற்சிகளை முன்னெடுப்போம்.

நாட்டின் இன்றைய சூழ்நிலை மிகவும் கவலைக்குரியாகவே உள்ளது. இன்றைய ஆட்சியாளர்கள் மட்டில் பொதுவாக மக்கள் அதிருப்தி அடைந்திருப்பது வெளிப்படையாக தெரிகின்றது.

நாட்டின் வளங்களை வெளிநாட்டுச் சக்திகளுக்கு விற்பனை செய்வதாக ஆட்சியாளர்கள்மேல் கடுமையான குற்றச் சாட்டுக்கள் எழுப்பப்பட்டு வருகின்றது.

கொரோனா தொற்றுநோய் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி தடைப்பட்ட சூழ்நிலையில் சில பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.

சில பொருட்களுக்கு கனவில் நினையாத அளவுக்கு விலை மலைபோல் உயர்ந்துள்ளது. இரசாயனப் பசளைகளின் இறக்குமதி நிறுத்தப்பட்டமையால் காலாகாலமாக அதற்குப் பழக்கப்பட்ட விவசாயிகள் இந்த பெரும்போக விவசாயம் தமக்கு எப்படி அமையுமோ என்ற மன ஆதங்கத்தில் உள்ளனர்.

போராட்டங்களும் தொடர்ந்த வண்ணம் காணப்படுகின்றது. இப்படியான ஒரு வாழ்வியல் சூழ்நிலையில் ஆண்டவரின் வார்த்தை ஆறுதலின் செய்தியை நமக்குக் கொண்டு வருகின்றது.

'இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் போற்றப்படுவாராக. ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்' என இவ்வாறு மன்னார் ஆயர் தனது திருமடலில் தெரிவித்துள்ளார்.

‘இதுவும் கடந்து போகும்' என்னும் நம்பிக்கையில் இறைவனைப்பற்றிக் கொள்வோம் - ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை