வெள்ளத்தால் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்ந்து பாதுகாப்பான நிலையங்களில்.

மன்னாரில் புதன்கிழமை (10.11.2021) மழை வீழ்ச்சி இல்லாதபோதும் கடந்த சில தினங்களாக பெய்துவந்த மழை வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்ந்து அதே இடங்களில் இருந்து வருகின்றனர். இவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கே.திலீபன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒன்பது நாட்களாக (01.11.2021- 09.11.2021) பெய்து வந்த மழையின் காரணமாக 4215 குடும்பங்களைச் சார்ந்த 14,951 நபர்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகியபோதும் 107 குடும்பங்களைச் சார்ந்த 391 நபர்கள் ஆறு பாதுகாப்பான அமைவிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மன்னாரில் புதன்கிழமை (10) மழை வீழ்ச்சி இல்லாதபோதும் காலநிலை இன்னும் வழமைக்கு திரும்பாத நிலையே காணப்படுகின்றது. வானம் இருள் சூழ்ந்து காணப்படுவதுடன் கடும் குளிராகவும் இப் பகுதி காணப்படுகின்றது.

அத்துடன் மழை வெள்ளம் தொடர்ந்து குடியிருப்புக்களில் காட்சி அளிக்கின்றது. இதனால் தத்தமது இடங்களிலிருந்து இடம் பெயர்ந்துள்ளவர்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்ப முடியாத நிலை காணப்படுகின்றது.

மன்னார் நகர் பிரதேச செயலகப் பிரிவில், எழுத்தூர் செல்வநகர் பகுதியில் 15 குடும்பங்களைச் சார்ந்த 60 நபர்களும்,
தலை மன்னார் பியர் பகுதியைச் சேர்ந்த 37 குடும்பங்களைச் சார்ந்த 113 நபர்களும், எமில்நகர் பகுதியைச் சேர்ந்த 40 குடும்பங்களைச் சார்ந்த 161 நபர்களும், தலை மன்னார் கிராமம் தெற்கு பகுதியிலுள்ள 7 குடும்பங்களைச் சார்ந்த 24 நபர்களும், சவுத்பார் பகுதியிலுள்ள 4 குடும்பங்களைச் சார்ந்த 17 நபர்களும், மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் விடத்தல்தீவு பகுதியிலுள்ள 4 குடும்பங்களைச் சார்ந்த 16 நபர்களும் மொத்தம் 107 குடும்பங்களைச் சார்ந்த 391 பேர் குறிப்பிடப்பட்ட பாதுகாப்பான இடங்களில் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தொடர்ந்தும் இத் தங்கல் நிலையங்களில் இருந்து வருகின்றமையால் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிதியுதவியில் அந்ததந்த பிரதேச செயலாளர்கள் ஊடாக இவர்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கே.திலீபன் மேலும் தெரிவித்தார்.

வெள்ளத்தால் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்ந்து பாதுகாப்பான நிலையங்களில்.

வாஸ் கூஞ்ஞ