வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்  -  வெளிநாட்டிலிருந்து ஒப்பரேற் பண்ணுகிறார்

அரியாலைப் பகுதியில் வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுவீசியதுடன் தாக்குதல் மேற்கொண்டார்கள் என்ற சந்தேகத்தில் இளைஞர்கள் இருவர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமக்கு வெளிநாட்டிலிருந்து ஒருவர் 30 ஆயிரம் ரூபா பணம் வழங்கியதாகவும் அதற்கு அமையவே தாம் தாக்குதல் நடத்தியதாகவும் அவர்கள் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:

கடந்த ஒக்ரோபர் 10 ஆம் திகதி யாழ்ப்பாணம் ஏ-9 நெடுஞ்சாலையில் அரியாலைப் பகுதியில் இரவு வேளையில் வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுவீசப்பட்டதுடன் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளும் அடித்து உடைக்கப்பட்டன.

இந்த சம்பவத்தில் இளைஞர்கள் இருவர் ஈடுபட்டிருந்தமை தொடர்பிலான சி.சி.ரி.வி காட்சிகளும் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் 22, 18 வயதுகளையுடைய இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் சாவகச்சேரி மற்றும் உடுவில் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தமக்கு வெளிநாட்டிலிருந்து ஒருவர் 30 ஆயிரம் ரூபா பணம் வழங்கியதாகவும் அதற்கு அமையவே தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தின் வேறு பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல்களுடனும் தமக்குத் தொடர்பிருப்பதாகவும் அவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கைதானவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்  -  வெளிநாட்டிலிருந்து ஒப்பரேற் பண்ணுகிறார்

எஸ் தில்லைநாதன்