ரிஷாத்தின் அம்பாறை மாவட்ட விஜயம்

ஆறு மாதகால சிறை வாசத்தின் பின்னர் பிணையில் விடுதலையான முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் “விடுதலையின் பின்னர் முதல் தடவையாக இன்று வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு முஸ்லிம் பிரதேசங்களுக்கும் விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு சென்ற இடமெல்லாம் கட்சி ஆதரவாளர்களும் பிரமுகர்களும் பொது மக்களும் திரண்டு வரவேற்பளித்தனர்.

குறிப்பாக பெருமளவிலான பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட்டை காண்பதற்காக இதன்போது திரண்டு வந்ததையும் அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக அவரது வருகையின் போது திரண்ட கட்சி ஆதரவாளர்கள் பொது மக்கள் அவரை உணர்வு மேலிட ஆரத்தளுவி முஸாபாஹ் செய்து கொண்டனர்.

பெண்கள் கண்ணீர் மல்க அவரை நெருங்கி சந்தித்து நலம் விசாரிப்பதில் ஈடுபட்டதையும் காணமுடிந்தது.

நற்பிட்டிமுனையில் வயோதிபப் பெண் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை ஆர்வத்துடன் சந்தித்த போது கடந்த ஆறு மாத காலமாக உங்கள் விடுதலைக்காக தினமும் கண்ணீர் சிந்தி இறைவனிடம் துஆ கேட்டதால் இப்பொழுது சிந்துவதற்கு கண்ணீரே இல்லையென மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக கூறினார்.

நற்பிட்டிமுனையில்

நேற்று காலை நட்பிட்டிமுனை பிரதேசத்தில் கல்முனை மாநகர சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் சீ.எம்.முபீத் தலைமையில் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.

பெருமளவிலான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்ட இச்சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் முஸாரப் முதுநபீன், தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனைத் தொகுதி இளைஞர் அமைப்பாளர் சீ.எம்.ஹலீம் உட்பட கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் பலரும் மற்றும் அம்பாறை மாவட்ட மத்திய குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த மக்கள் சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.

“எனது இந்த வருகை தேர்தல் ஒன்றுக்கு பிரச்சாரம் செய்வதற்கானதோ அல்லது புதிய கட்டிடங்களின் திறப்பு விழாவிற்கானதோ அல்ல. அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் எனக்கு நடந்த அநீயாயத்திற்கு நீதி கோரி இரவு பகலாக இறைவனிடம் துஆப் பிராத்தனை செய்த எமது மக்களுக்கு நன்றி கூறுவதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன்.

எனக்கு நடந்த அநியாயம் இனி ஒருவருக்கும் நடந்துவிடக்கூடாது என்பதே எனது பிரார்த்தனையாகும். நான் இந்த அநியாயத்தின் மூலம் கடந்த ஆறு மாதங்களாக சிறையில்வாடி அடைந்த பெரும் வேதனை ஒரு வரலாற்று புத்தகம் எழுதக்கூடியது.

ஒரு மணி நேரத்தில் ஒரு இலட்சம் பேருக்கு அதிகமானவர்கள் படித்த புத்தகத்தினுடனும் உடுப்புகளுடனும் சொந்த மன்னைவிட்டு வெளியேறிய ஒரு மணி நேர நிபந்தனைகளுடன் கூடிய வேதனையையே நானும் 18 வயது இளைஞனாக அனுபவித்தேன். இந்த வெளியேற்றப்பட்ட ஒரு இட்சம் மக்களில் நானும் ஒருவர்.

அவ்வாறான வேதனைகளுக்கும் அப்பால் சாதாரண சிறைக் கைதிகளைவிடவும் ஒரு மடங்கு கூடிய அநியாயத்தை நான் சந்திக்க நேர்ந்தது. இந்த அநியாயத்திற்கு இறைவன்தான் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று அதனை அவனிடமே ஒப்படைத்துள்ளேன். அதற்காக இறைவனுக்கு நன்றி பகரவும் கடமைப்பட்டுள்ளேன்.

எனக்கு நேர்ந்த இந்த அநீயாயத்திற்காக பெருந்துயருற்று என் விடுதலைக்காக இறைவனிடம் மன்றாடிய அத்தனை நல் உள்ளங்களுக்கும் எனது நன்றிகளை தெரிவிக்க விரும்புகின்றேன்” என்றார்.

இதேவேளை இன்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அம்பறை மாவட்டத்தின் நாவிதன்வெளி, பொத்துவில், அக்கறைப்பற்று, அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை, நிந்தவூர், சென்றல்கேம்ப் முதலான பிரதேசங்களுக்கும் விஜயம் செய்து மக்களை சந்தித்ததுடன் நாளை சனிக்கிழமை (20.11.2021) அம்பாறை மாவட்டத்தின் மேலும் பல முஸ்லிம் பிரதேசங்களிலும் மக்கள் சந்திப்புகளில் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.

ரிஷாத்தின் அம்பாறை மாவட்ட விஜயம்

ஏ.எல்.எம்.சலீம்