ரிஷாட் வருகிறார்

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஆறுமாத காலத்தின் பின்னர் பிணையளிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார்.

எதிர்வரும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தரவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட்டின் வருகை தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாட்ட செயற்குழுகூடி ஆராய்ந்துள்ளது.

நிந்தவூரிலுள்ள கட்சியின் அம்பாறை மாவட்ட காரியாலயத்தில், அம்பாறை மாவட்ட செயற்குழு தலைவர் எம்.ஏ.அன்சில் தலைமையில் இதற்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இதன்போது, கட்சி முக்கியஸ்தர்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் உட்பட குறிப்பாக தாய்மார்கள் என பல்வேறு தரப்பினரும் தலைவர் ரிஷாட்டை சந்திப்பதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தும் வகையிலான ஏற்பாடுகளைச் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டதாகக் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் 6 ஆம் திகதி சனிக்கிழமை மாட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்திற்கும் தலைவர் ரிஷாட் பதியுதீன் வருகை தரவுள்ளார்.

ஏற்கனவே புத்தளம் உட்பட வடக்கின் பலபிரதேசங்களுக்கும், களுத்துறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களுக்கும் கடந்த வாரம் தலைவர் ரிஷாட் வருகை தந்திருந்தாரென்பதும் குறிப்பிடத்தக்கது.

ரிஷாட் வருகிறார்

ஏ.எல்.எம்.சலீம்