மன்னாரில் 06 பாதுகாப்பு இடங்களில் இடம்பெயர்ந்தவர்கள் தங்கவைப்பு. புதன்கிழமை (10.11.2021) பாடசாலைகளுக்கு விடுமுறை.

மன்னாரில் காலநிலை தொடர்ந்து இயல்பு நிலைக்கு திரும்பாத நிலை காணப்படுவதாலும், பல இடங்களில் மழைத்தண்ணீர் தேங்கி நிற்பதாலும் மன்னார் மற்றும் மடு கல்வி வலயப் பணிப்பாளர்களுடன் கலந்தாலோசித்ததுக்கு அமைவாக புதன்கிழமை (10.11.2021) பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக மன்னார் அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒன்பது நாட்களாக (01.11.2021- 09.11.2021) பெய்து வந்த மழையின் காரணமாக 4215 குடும்பங்களைச் சார்ந்த 14,951 நபர்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகியபோதும் 107 குடும்பங்களைச் சார்ந்த 391 நபர்கள் ஆறு பாதுகாப்பான அமைவிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மன்னார் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மன்னார் நகர் பிரதேச செயலகப் பிரிவில் எழுத்தூர், செல்வநகர் பகுதியில் 15 குடும்பங்களைச் சார்ந்த 60 நபர்கள் அறநெறி பாடசாலையிலும்,

தலைமன்னார் பியர் பகுதியைச் சேர்ந்த 37 குடும்பங்களைச் சார்ந்த 113 நபர்கள் ஸ்ரீதேவி முத்துமாரியம்மன் கோவிலிலும்,

எமில்நகர் பகுதியைச் சேர்ந்த 40 குடும்பங்களைச் சார்ந்த 161 நபர்கள் சென்.மதர் திரேசா பாடசாலையிலும்,

தலைமன்னார் கிராமம் தெற்கு பகுதியிலுள்ள 7 குடும்பங்களைச் சார்ந்த 24 நபர்கள் சென்.லோறன்ஸ் றோமன் கத்தோலிக்க பாடசாலையிலும்,

சவுத்பார் பகுதியிலுள்ள 4 குடும்பங்களைச் சார்ந்த 17 நபர்கள் கிறிஸ்துராஜா ஆலயத்திலும்,

மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் விடத்தல்தீவு பகுதியிலுள்ள 4 குடும்பங்களைச் சார்ந்த 16 நபர்கள் மொத்தம் 107 குடும்பங்களைச் சார்ந்த 391 பேர் குறிப்பிடப்பட்ட பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மன்னார் பகுதியில் பரவலாக அதிகமான தாழ்ந்த பகுதி இடங்களில் மழைநீர் வெள்ளம் காரணமாக சில பகுதிகளில் போக்குவரத்து செய்ய முடியாத நிலை காரணமாகவும் தொடர்ந்து மன்னாரில் காலநிலை இயல்பு நிலையற்ற தன்மையில் காணப்படுவதாலும் மன்னாரில் அனைத்து பாடசாலைகளும் புதன்கிழமை (10.11.2021) இன்று விடுமுறை வழங்கப்படுவதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரன்லி டீமெல் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் 06 பாதுகாப்பு இடங்களில் இடம்பெயர்ந்தவர்கள் தங்கவைப்பு. புதன்கிழமை (10.11.2021) பாடசாலைகளுக்கு விடுமுறை.

வாஸ் கூஞ்ஞ