
posted 16th November 2021
முன்னாள் ஜனாதிபதி மைத்தரியின் எண்ணக்கருவிலும் முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் ராகவனின் வழிநடத்துதலிலும் 2019 ஆம் ஆண்டு வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட திருவள்ளுவரின் விழா தொடர்ந்து தற்பொழுதும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் இந்த ஆண்டு (2021) வடக்கு மாகாணத்தில் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் மன்னார் மாவட்ட செயலகமும், மன்னார் மாவட்ட கலை, பண்பாட்டுப் பேரவையும் இணைந்து மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட செயலக சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தனின் ஒருங்கமைப்பில் இவ் விழா செவ்வாய் கிழமை (16.11.2021) மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
அத்துடன் மன்னார் மாவட்டத்தின் முதல் பெண்மணியாக மன்னார் மாவட்டத்தின் அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் பதவியேற்று ஓராண்டு நிறைவையும் இன்று நினைவு கூறப்பட்டதுடன்
மன்னார் மாவட்டத்தின் அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் பதவியேற்ற ஓராண்டு நினைவின் பதிவாகவும் திருவள்ளுவர் விழாவும் அத்துடன் மன்னார் மாவட்டத்துக்கென கீதம் வெளியீடும் இன்று இடம்பெற்றது.
இதன் ஆரம்ப நிகழ்வாக முன்னாள் மன்னார் அரசாங்க அதிபராக இருந்த விஸ்வலிங்கம் அவர்களால் மன்னார் நகர சபை வளாகத்தில் திறந்துவைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் அவர்களால் மாலை அணிவிக்கப்பட்டதுடன்
இதைத் தொடர்ந்து திருவள்ளுவர் வலம் வருகையும் இடம்பெற்றதுடன் வள்ளுவர் தொடர்பான சிறப்பு சொற்பொழிவு மன்னார் மாவட்ட சைவக் கலை இலக்கிய மன்றத் தலைவர் செந்தமிழருவி சிவஸ்ரீ மகா தர்மகுமாரக்குருக்களால் நிகழ்த்தப்பட்டது.
அத்துடன் திருவள்ளுவர் தொடர்பான கவியரங்கம், பட்டிமன்றம் திருக்குறல் நடனம் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் மன்னார் மாவட்டத்துக்கான புதிய கீதமும் வெளயீடு செய்யப்பட்டது.
மேலும் திருவள்ளுவர் விழா கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கும் மாவட்ட கீதம் உருவாக்கத்துக்கு பங்களிப்பு செய்தவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

வாஸ் கூஞ்ஞ