
posted 23rd November 2021

தேசிய இயக்கத்தின் உப தலைவரும் ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.முகம்மது முக்தார்
அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் அரச சேவை ஓய்வூதியர்களுக்கு பாரிய அநீதியிழைக்கப்பட்டிருப்பதாக ஓய்வூதியர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் உப தலைவரும் ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.முகம்மது முக்தார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக அரச சேவை ஊழியர்களும் ஓய்வூதியர்களும் வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் எதிர்வரும் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்பு எதுவும் மேற்கொள்ளப்படாமல் அரசாங்கத்தினால் இவர்கள் கைவிடப்பட்டிருப்பதானது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
அதிலும் குறிப்பாக 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஓய்வு பெற்றவர்களுக்குரிய ஓய்வூதிய அதிகரிப்பை வழங்குவதற்காக நல்லாட்சி அரசாங்கம் நிதியொதுக்கீடு மேற்கொண்டிருந்த போதிலும், ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து திடீரென 2020 ஜனவரியில் 35/2019 (1) ஆம் இலக்க சுற்று நிருபத்தின் மூலம் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டமையால் அவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
மேலும், 2016 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது என்பதும் தெரியாமலே உள்ளது. எவ்வாறாயினும் 2022ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திலாவது மேற்படி ஓய்வூதியர்கள் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என எம்மால் வலியுறுத்தப்பட்டு வந்தபோதிலும் அதனை அரசாங்கம் கவனத்தில் கொள்ளாமல் புறக்கணிப்பு செய்திருக்கிறது.
பொதுவாக ஓய்வூதியர்களின் வாழ்க்கைச் சுமைக்கு ஓரளவாவது ஆறுதலளிக்கும் வகையில் இந்த பட்ஜெட்டில் சிறுதொகை அதிகரிப்பைக்கூட வழங்க அரசாங்கம் முன்வராதிருப்பதையிட்டு எமது அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம், என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம்