
posted 26th November 2021
யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள சங்கிலியன் பூங்காவில் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற பசுமைக் கண்காட்சி தொடர்பில் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத்தூதரகம் தெளிவுபடுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வில் கார்த்திகைப் பூ சூடிய விடயம் தொடர்பில் இணையத்தளங்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிகழ்வு என திரிபுபடுத்தப்பட்டு செய்திகள் வெளியான நிலையிலேயே இந்திய தூதரகத்தினால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மரக்கன்றுகள் விநியோக நிகழ்வு தொடர்பான பல தவறான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தமை கவனத்திற்கு வந்தன.
யாழ். இந்தியத் துணைத் தூதுவர் , அழைப்பின் பேரில் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். அத்தகைய பங்கேற்பு அமைப்பாளர்கள் அல்லது அவர்களின் செயல்களுடன் உத்தியோகபூர்வ நிகழ்ச்சிக்கு வெளியே, எந்த வகையிலும் சம்பந்தப்படவில்லை. இது தொடர்பில் அவருக்கு எந்த முன் அறிவித்தலும் வழங்கப்படவில்லை.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்