
posted 24th November 2021
தனியார் கம்பனிகள் இறக்குமதி செய்வதாக இருந்தாலும் இலங்கையில் உள்ள வங்கிகளே டொலர்களை வழங்க வேண்டும் ஆனால் வங்கிகளில் டொலர் இல்லாத நிலையில் எவ்வாறு உரம் இறக்குமதி செய்ய முடியும்? என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் இவ்வாறு கேள்வி எழப்பியுள்ளார்.
வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் செய்தியில்;
இரசாயன உரங்களையும் களை நாசிகளையும் திரவ உர வகைகளையும் தனியார் நிறுவனங்கள் இறக்குமதி செய்வதற்கான அனுமதி வர்த்தமானி வெளியிடப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்தானந்த ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு தங்களுக்கு சாதகமான கம்பனிகளுக்கு அனுமதி வழங்குவதற்கா? அல்லது மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பில் இருந்து விடுபடுவதற்கான தந்திரமா? என்ற சந்தேகங்கள் எழுகின்றன.
காரணம், நாட்டில் போதிய டொலர் இல்லாமையே பல இறக்குமதிகள் தடை செய்யப்பட்டமைக்கு மூல காரணமாகும். அவ்வாறு இருக்கையில் அரசாங்கம் தாங்கள் இறக்குமதி செய்ய வேண்டிய உர இறக்குமதியை தனியாரிடம் கொடுப்பதிலும் டொலர் பிரச்சினை தான் உண்மையான காரணம். ஆனால், மக்களை ஏமாற்ற தனியாருக்கு அனுமதி கொடுப்பதாக ஒரு தந்திரோபாய நகர்வை அரசாங்கம் முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.
தனியார் கம்பனிகள் இறக்குமதி செய்வதாக இருந்தாலும் இலங்கையில் உள்ள வங்கிகளே டொலர்களை வழங்க வேண்டும். ஆனால், வங்கிகளில் டொலர் இல்லை. இல்லாவிட்டால் ஒரு தடவை இறக்குமதி செய்த உரத்திற்கான டொலரை மீளப் பெறாமல் தனியார் கம்பனிகளாலும் மீள இறக்குமதி செய்ய முடியாத நிலை உருவாகும்.
ஏற்கனவே நாட்டின் கொழும்பு துறைமுகத்தில் நூற்றுக் கணக்கான கப்பல்கள் நாட்டில் டொலர் இல்லாமையால் சுங்கத்தால் பொருட்களை இறக்குவதற்கான அனுமதி வழங்கப்படமால் காத்திருக்கின்றன.
ஆகவே அரசாங்கத்திற்கு ஏற்படுகின்ற எதிர்ப்பினை சமாளிக்கவும் நாங்கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்கி விட்டோம் என்று கூறுவதற்குமாக இந்த வர்த்தமானியை கொண்டு வருகின்றனர். ஆனால் அரசாங்கம் உர இறக்குமதியை மேற்கொள்ள முடியாதுள்ளமைக்கு டொலர் இன்மையே காரணம். எனவே விவசாயிகளுக்கு தொடர்ந்தும் ஏமாற்றமா? என்ற கேள்வியை எழப்பியுள்ளார் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ்.

வாஸ் கூஞ்ஞ