
posted 18th November 2021

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
ஜனாஸாக்களை அடக்கம் செய்ய ஓட்டமாவடிக்கு அனுப்புவதை நிறுத்துங்கள் - பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் விசனம்!
கொரோனா நீரினால் பரவுவதில்லை என்பது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகையால், ஜனாஸாக்களை ஓட்டமாவடிக்கு அனுப்புவதை நிறுத்துங்கள் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின்போது செவ்வாய் கிழமை (16.11.2021) பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது,
தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த நிதியமைச்சருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனது விமர்சனங்களை முன் வைக்கின்றேன்.
இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு ஏன் இவ்வளவு பயப்படுகிறீர்கள்? இன்றைய எல்லா தேசிய பத்திரிகைகளிலும் எழுபதுக்கும் மேற்பட்ட பொலிஸ் நிலையங்களிலிருந்து ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு கோரி நீதிமன்றங்களுக்குச் சென்றதாக செய்தி வெளியாகியுள்ளது.
தொற்று நோயை காரணம் காட்டி முன்னர் ஆர்ப்பாட்டஞ் செய்தவர்களை கைது செய்தும், தடுத்துவைத்தும், தனிமைப்படுத்தியும் கண்ட பலன் என்ன? நாட்டிற்கும், அரசாங்கத்திற்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளதுதான் மிச்சம். அனேகமான நீதிமன்றங்கள் தடையுத்தரவு வழங்க மறுத்திருக்கும் போது, சந்தி சந்தி தோறும் பொலிசாரை கொண்டு வந்து குவித்து ஆர்ப்பாட்டத்திற்கு வருவோரைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்கின்றீர்கள்.ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறீர்கள்?
சரியான நீதி முகாமைத்துவம் இன்மையால் நிலைமை மோசமாகியுள்ளது. உங்களது அரசாங்கம் வற் (VAT) வரியை 15 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக குறைத்ததன் விளைவாகவும் பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
விஞ்ஞான பூர்வமற்ற இன்னொரு நடைமுறைதான் அரசாங்கம் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு மேற்கொண்ட தீர்மானம். அத்துடன், நீரினால் கொரோனா பரவுகின்றதென்ற
தீர்மானம் முற்றிலும் விஞ்ஞானபூர்வ மற்றது. இங்கிருக்கும் டாக்டர் ரொமேஷ் பத்திரண போன்ற அமைச்சர்களுக்கும் அது பற்றி நன்றாகத் தெரியும் .
அவ்வாறு தெரிந்திருந்தும் கூட, இன்னமும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை இரண்டு நாட்கள் கழித்து ஓட்டமாவடிக்கு அடக்கஞ் செய்வதற்கு அனுப்புகின்றனர்.
இனியாவது அவ்வாறு செய்வதை நிறுத்துங்கள். அது பிரதமர் கூட ஏற்றுக் கொண்ட விஷயம். ஏன் அதனைச் செய்ய முடியாது? முன்னர் அவ்வாறான ஜனாஸாக்களை மாலைதீவுக்கு அனுப்பி, அங்கு அவற்றை அடக்கம் செய்வதற்கு இந்த அரசாங்கம் எத்தனித்தது.
நாங்கள் அரசாங்கத்தை இவ்வாறு விமர்சிக்கும் போது வலிக்கத்தான் செய்யும். ஆனாலும், நாங்கள் விமர்சிக்கத்தான் வேண்டும்.
ஏனென்றால், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட "ஒரே நாடு ஒரே சட்டம்" என்ற தீர்மானத்தின்படி, ஜனாதிபதி, ஆணைக்குழு ஒன்றை அமைத்து, இனங்களுக்கிடையில் குரோதத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தி வருகின்ற மதகுரு ஒருவரை அதற்குத் தலைவராகவும் நியமித்திருக்கையில், நாட்டிலுள்ள இனங்களுக்கிடையில் எப்படி நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்?
எனவே, இவ்வாறு சிறுபான்மை மக்களை தூரப்படுத்தும் செயற்பாடுகளை இனியாவது கைவிடுங்கள். வேலை வாய்ப்பின்மையும், வறுமையும், உணவுப் பற்றாக் குறையும் அதிகரித்து வருகின்ற இவ்வேளையில் பணத்தாள்களை அச்சிட்டுக் கொண்டிருப்பதன் பலனென்ன? நீங்களோ வெளிநாட்டுச் செலாவணிக்காகத் திண்டாடுகின்றீர்கள்.
சேதனப்பசளை விஷயத்தில் எடுத்த தீர்மானத்தின் விளைவுகளை பெரும்போக பயிர்ச்செய்கையின் பின்னர் நாடு காணத்தானே போகின்றது. வறுமையோ மேலும் தாண்டவமாடப் போகின்றது.
ஒரு நகைச்சுவையான விடயமென்னவென்றால், வரவு செலவு திட்டத்தில், விபத்திற்கு உள்ளாகும் வாகனங்களுக்குக் கூட தண்டக் கட்டணம் அறவிடப் போவது என்பதுதான். வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்க முன்னர் நிதியமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் அதுபற்றி கேட்டபோது, “மக்களுக்கு கொடுப்பதற்கு இல்லை; அவர்களிடமிருந்து எடுப்பதற்குத்தான் இருக்கின்றது" என்று கூறியுள்ளார்.
இறுதியில் வேறு வழியில்லாமல் சர்வதேச நாணய நிதியிடம் தான் தஞ்சமடையவேண்டும். அங்கு விதிக்கப்படும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு நிதியுதவி பெறுவதுதான் இன்றைய சூழ்நிலையில் எஞ்சியிருக்கும் ஒரேயொரு வழியாகும்.
சுத்திகரிக்கப்படாத மசகு எண்ணெய்யை கொள்வனவு செய்யயுள்ளதாக சம்பந்தப்பட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார். இங்கு எண்ணெயை சுத்திகரிப்பதை நிறுத்திவிட்டு, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயைக் கொள்வனவு செய்வதற்கு தேவையான வெளிநாட்டுச் செலாவணிக்கு எங்கே போவது?என்றார்.

ஏ.எல்.எம்.சலீம்