
posted 19th November 2021
கடந்த சில தினங்களாக வடகிழக்கு ஆயர்கள் விடுத்த கார்த்திகைத் திங்கள் 20ம் நாள் நினைவுகூரல் விடயமாக பல தரப்புகளிலிருந்து விமர்சனங்கள், வாபஸ் பெறக் கோரிக்கைகள், பத்திரிகைகளிலும், சமூக ஊடகங்களிலும் வந்து கொண்டிருப்பது நாம் அறிந்த விடயம். ஆனால், அது கவலைக்குரியதுமாகும்.
நினைவுகூரல் என்பது ஒரு உரிமையாகும். வரலாற்றில் நினைவுகூரலின் அடையாளமாக, எகிப்திய பிரமிட்டிகள், அரசர்களின் சிலைகள், இத்தாலியிலுள்ள 'கற்றகூம்ஸ்' என அழைக்கப்படும் கல்லறைகள் எனப் பல உதாரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
எல்லா மதங்களிலும் ‘நினைவுகூரலுக்கான சடங்குகள், நாட்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்து மக்கள் ஆடி அமாவாசை, சித்திரா பௌர்ணமி என்றும், கத்தோலிக்கர் நவம்பர் மாதத்தை சகல ஆத்துமாக்களின் மாதமென்றும் நினைவு கூர்ந்து வருகின்றனர். பல நூற்றாண்டுகளாக மத நினைவுகூரல் இடம்பெற்று வருகின்றது.
தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட பல இயக்கங்கள் வெவ்வேறு தினங்களில் தம் சக போராளிகளை நினைவுகூருகின்றனர். பல்வேறு பெயர்களில் வீரமக்கள் தினம், தியாகிகள் தினம், மாவீரர் தினம் என அழைக்கப்பட்டு நினைவுகூறுகின்றார்கள். இன்னும் முள்ளிவாய்க்கால் கூட்டு நினைவுகூரல் என கூட்டழிப்பின் பின்னரான காலப்பகுதியில் அனைத்து தமிழ் மக்களால் நினைவு கூரப்படுகின்றது.
எனவே, தமிழ் மக்களிடையே போராட்டத்தைத் தொடர்ந்து போரில் இறந்தவர்களை நினைவுகூரல் என்பது பல்வகைமையைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.
ஆயர்கள், கத்தோலிக்க நோக்கிலிருந்து, கார்த்திகை மாதமாகிய சகல ஆத்துமாக்களின் மாதத்தில் போரில் இறந்த அனைவரையும் விஷேடமாக நினைவுகூர்ந்து செபிக்கும்படி 20ம் திகதியை நிர்ணயித்து கத்தோலிக்கர்கட்கு அழைப்புவிடுத்தனர்.
போரில் இறந்தவர்களை நினைவுகூரல் பல்வேறு தினங்களில் தமிழ் மக்களிடையே நடைபெற்றாலும், தமிழர்களுக்கு இப்போது தேவைப்படுவது ஈழத்தமிழினத்தின் கூட்டழிப்பின் நினைவுகூரலுக்கான ஒரு பொதுப்படிமம் (ICON). ஒரு பொதுப்படிமம் கட்டமைக்கப்பட வேண்டியது காலத்தின் அவசியமாகும்.
படிமம் கட்டமைக்கப்படுவதற்கான நோக்கம், அதனைச் சுற்றிய அணித்திரட்டலின் இயங்குதலை, தமிழினத்தின் இன்றைய அடக்குமுறை எதிர்ப்பிற்கான சக்தியாக மாற்றுவதேயாகும். இதுவே நினைவுகூரலின் இன்றைய தேவையாகும். பண்பாட்டில் படிமவியல் இன்றியமையாதது.
வடகிழக்கு ஆயர்கள் சென்ற மே மாதம், முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது 'இனப்படுகொலை' என்று அறிவித்தமை, இனப்படுகொலையின் நினைவுகூரலின் படிமம் ஒன்றின் அவசியத்தை வலியுறுத்துகின்றது.
யூத இனப்படுகொலை மறுப்பு தீவிரமடைந்த போது 2012ல் யூத ஓவியர் மோஷாக் லின் என்பவர் வரைந்த “வோர்சோ பையனின்” ஓவியம் சிறந்தவொரு படிமமாக கருதப்படுகின்றது. இப்படிமத்தில் மூன்று நாசிப்படை வீரர் துப்பாக்கி ஏந்தி யூத சிறுவன் மீது குறிவைப்பதையும் அச்சிறுவன் கையை உயர்த்தி நிற்பதையும் வரைபடத்தில் காண்பிக்கப்பட்டது.
இப்படிமம் யூத இனப்படுகொலைக்கு நீதிகோரியதாகவும், சாட்சியமில்லாது ஒருதலைமுறையிலிருந்து மற்றைய தலைமுறைக்கு யூதப்படுகொலையை கடத்துவதாகவும் பொருள் கொள்ளப்பட்டது.
தமிழ் மக்களாகிய நாம் கூட்டு நினைவுகூரலுக்கான பொதுப்படிமத்தை கட்டமைத்து அதனை தமிழ் மக்களின் அடக்கு முறைக்கு எதிரான சக்தியாக மாற்றவேண்டும். அத்துடன், அப்படிமம், தாயகத்திலும், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றுசேர்க்கும் ஒருபுள்ளியாகவும், இனஅழிப்புக்கு எதிரான நீதி கோரும் ஒன்றாக மாற்றுவதே காலத்தின் தேவையாகும். இதுவே நினைவுகூரலின் நோக்கமுமாகும்.
அருட்பணி கி. ஜோ. ஜெயக்குமார்