டெங்கு வாரம் அனுஷ்டிப்பு
டெங்கு வாரம் அனுஷ்டிப்பு

டாக்டர். ஜீ. சுகுணன்

மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை 8 ஆம் திகதி திங்கள் முதல் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் அனுஷ்டிக்கப்பட விருப்பதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஜீ. சுகுணன் தெரிவித்துள்ளார்.

தற்போதய பருவப் பெயரச்சி மழை தொடர்வதாலும், மேற்கொள்ளப்பட்ட டெங்கு நுளம்பு பரவுகை கண்காணிப்பு நடவடிக்கையின் பிரகாரமும் குறித்த நுளம்புகள் பெருகும் இடங்கள் அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன்,

எதிர்வரும் வாரங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகரிக்க கூடியநிலமையுள்ளதாகவும், சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரித்துள்ளது.

இந்த நிலமை கிழக்கிலும் இருந்து வருவதையொட்டி கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில், டெங்கு அபாயப் பிரதேசங்களாக இனம் காணப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி பிராந்திய பணிப்பாளர் டாக்டர். சுகுணனின் வழிகாட்டலில் வழிப்பூட்டல் மற்றும் களப்பரிசோதனை நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும்,

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டிற்கமைய நாளை 8 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 3178 பேர் டெங்கு நோயாளர்களாக இனம் காணப்பட்டுள்ளதாகவும், ஐந்து மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். ஏ.ஆர்.எம்.தௌபீக் தகவல் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

டெங்கு வாரம் அனுஷ்டிப்பு

ஏ.எல்.எம்.சலீம்