ஜே.வீ.பி யின் சுவரொட்டிகள்

நாட்டில் விஷம் போல் ஏறியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்குமாறு அரசைக் கோரி மலையகம் உட்பட, நாட்டின் பல பிரதேசங்களிலும் பொது மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும், மக்களின் இத்தகைய அவலங்களை வெளிப்படுத்தி இத்தகைய மக்களுடன் இணைந்த ஆர்ப்பாட்டங்களையும் தொடர்ந்து வருகின்றது.

நாடு போராட்டகளமாகவே மாறிவரும் நிலையில் மக்கள் விடுதலை முன்னணியும், விலைவாசி உயர்வு காரணமாக நாட்டு மக்கள் படும் அவலங்களுக்காக குரல் கொடுக்கவும் தவறவில்லை.

இதன் ஓர் அங்கமாக பண்டங்களின் விலை உயர்வுகளுக்குத் தீர்வை உடனடியாக வழங்குமாறு கோரி சுவரொட்டிகள் மூலம் அழுத்தத்தைக் கொடுத்துள்ளது.

“அரிசி, எரிவாயு (கேஸ்), எண்ணெய், பால்மா முதலான பண்டங்களின் விலை உயர்வுகளுக்கு உடனடியாகத் தீர்வினை வழங்கு” எனும் வாசகத்தையும், வலியுறுத்தலையும் கொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் தமிழ், சிங்கள மொழிகளிலான சுவரொட்டிகள் கிழக்கு உட்பட நாட்டின் பல பிரதேசங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.

இச்சுவரொட்டிகளுடன் இணைந்ததாக “உரிமைகளுக்காகப் பெண்கள்” எனக் குறிப்பிட்டு மற்றொரு சுவரொட்டியும் ஒட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

“கள்வர்கள் பென்டோரா பொதியில், எமது பிள்ளைகளோ பசியில்! பொருட்களின் விலையை உடனடியாகக் குறை” என அச்சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் 12 ஆம் திகதி நிதி அமைச்சரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட விருக்கும் நிலையிலேயே இத்தகைய சுவரொட்டிகள் தலைதூக்கியுள்ளன

ஜே.வீ.பி யின் சுவரொட்டிகள்

ஏ.எல்.எம்.சலீம்