
posted 29th November 2021
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில், முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய சுயாதீனச் செய்தியாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன், இராணுவத்தினரால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை (28) முல்லைத்தீவு நகரில் கண்டனப் போராட்டம் இடம்பெற்றது.
வடக்கு மாகாணத்தின் பல்வேறு ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பொதுமக்கள் ஒன்றிணைந்து, இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
ஊடகவியலாளர் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள், சித்திரவதைகளை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் ஊடக சுதந்திரம் நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், சிவகுரு ஆதீன குருமுதல்வர் வேலன் சுவாமிகள், பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், ஆண்டிஐயா புவனேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கமலநாதன், கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சிகளின் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், பொதுகமக்கள் எனப் பலர் பங்கேற்றனர்.

எஸ் தில்லைநாதன்