
posted 23rd November 2021
யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து திருட்டில் ஈடுபடும் இருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து நகைகளும் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணம் முதலாம் குறுக்குத் தெருப் பகுதியில் வீடு உடைக்கப்பட்டு ஆறு பவுண் நகையும், ஒரு தொகைப் பணமும் திருடப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்களால் முறையிடப்பட்டிருந்தது.
முறைப்பாடு தொடர்பில் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் குருநகர் பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 28 வயதுகளையுடைய நபர்கள் என்றும் அவர்களிடம் இருந்து ஆறரைப் பவுண் நகை மற்றும் ஒரு தொகைப் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர்கள் வேறு பகுதிகளில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களா என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன்