கவலையும், கண்டனமும்
கவலையும், கண்டனமும்

ஈ.பி.ஆர்.எல்.எப். முக்கியஸ்த்தருமான இரா.துரைரெத்தினம்

“மட்டக்களப்பு பிராந்தியத்தில் தொடர் தேரச்சியாக கெடுபிடிகளை முன்னெடுக்கும் பௌத்த மதகுருவின் வன்முறைத்தனத்தை நிறுத்துவதற்கு இன்றைய அரசு தலையிடாதிருப்பது ஏன்? என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், பத்ம நாபா மன்றம் ஈ.பி.ஆர்.எல்.எப். முக்கியஸ்த்தருமான இரா.துரைரெத்தினம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் தொடர்ச்சியான அச்சுறுத்தல் செயற்பாடுகள் தொடர்பில் அவர் கவலையும், கண்டனமும் தெரிவித்து விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

“15.11.2021 அன்று மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் மதகுருவினால் இடம் பெற்ற வன்முறைத்தனத்தை வன்மையாக கண்டிக்கின்றேன்.

பௌத்த மதகுரு அவர்களினால் மட்டக்களப்பு மாவட்ட பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் 15.11.2021 அன்று அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக காணிப் பிரச்சினைக்காக முறைகேடாக நடந்து கொண்டது கண்டனத்துக்குரியதாகும். இவர் ஒரு மதகுருவிற்கான குணாம்சம், செயற்பாடு, புனிதத்தன்மை, ஓழுக்கம் உள்ள மதகுருவா?

ஒரு சில பௌத்த குருமாரும், இம் மதகுருவும், இம் மாவட்டத்தில் 11.11.2013ஆம் ஆண்டு மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளருடன் ஏற்பட்ட பிரச்சினை, 13.11.2016ஆம் ஆண்டு மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் கெவிளியாமடு கிராமத்தில் கிராமசேவகருடன் ஏற்பட்ட வாய்த் தகராறு, 23.10.2018ஆம் ஆண்டு ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் மயிலம்பாவெளி என்னும் இடத்தில் மரம் வெட்டிய பொது பிரதேச செயலாளருடன், உத்தியோகத்தர்களுடனும் ஏற்பட்ட பிரச்சினை, 02.07.2020ம் ஆண்டு ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் கரடியனாறு கிராமத்தில் குசலான மலையில் தொல்பொருள் தொடர்பாக, 05.07.2020ஆம் ஆண்டு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வேத்துச்சேனையில் தொல்பொருள் தொடர்பாக 20.9.2020ஆம் ஆண்டு ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள பங்குடாவெளி பிரதான வீதியில் இலுப்படிச் சேனை (கௌரடி) என்னும் இடத்தில் தொல்பொருள் திணைக்களத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக செயற்பட்டமை, மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் அரச உத்தியோகத்தர்களுடன் ஏற்பட்ட பிரச்சினை, 11.2021ம் ஆண்டு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள புணானை என்னும் கிராமத்தில் ஏற்பட்டுள்ள காணிப் பிரச்சினை, இறுதியாக 15.11.2021 அன்று பிரதேச செயலகத்தில் அரச உத்தியோகத்தர்களை அச்சுறுத்தியது வரையும் இம் மதகுருவின் கெடுபிடிகள், அசிங்கமான நடவடிக்கைகள் நடந்து கொண்டே செல்கின்றன.

இலங்கை அரசும், பௌத்த சாசன அமைச்சும், இலங்கை நிருவாக சேவையும், உத்தியோகத்தர்கள் சம்பந்தப்பட்ட அமைச்சும், மதகுரு தொடர்பாக அவரின் வன்முறைத்தனத்தை நிறுத்துவது தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. பௌத்த மதகுரு என்பதற்காகவா? இதே தவறை ஏனைய மதகுருக்கள் செய்திருந்தால் அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கும்?

இதனால் மிகவும் சிறப்பான முறையில் செயற்பட்டு வருகின்ற அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் விரக்கதி நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட செயற்பாடுகளெல்லாம் ஒரு மதகுருவிற்குரிய அம்சங்களல்ல. எனவே இந்த மதகுரு தொடர்பாக அரசாங்கம் துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மையாக தமிழர்களாக வாழுகின்ற நாங்கள் பௌத்த மதகுருவை எதிர்க்கவில்லை. ஆனால், இவர் வன்முறையில் ஈடுபடுவதையும், ஒரு மதகுருவிற்கு இருக்கப்பட வேண்டிய புனிதத் தன்மை இல்லாத இந்த மதகுருவை வெறுக்கின்றோம்.

எனவே பௌத்தசாசன அமைச்சு இவரை இடமாற்றம் செய்வதற்கான விடயங்களை மேற்கொள்ளுமாறு வேண்டிக் கொள்வதோடு, இவர் இடம் மாற்றப்படும் பட்சத்தில் தமிழ்,சிங்கள உறவு மேலோங்கப்படும். என இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.

கவலையும், கண்டனமும்

ஏ.எல்.எம்.சலீம்