கவனவீர்ப்புப் போராட்டத்தில் நியமனமற்ற  சுகாதாரத் தொண்டர்கள்
கவனவீர்ப்புப் போராட்டத்தில் நியமனமற்ற  சுகாதாரத் தொண்டர்கள்

நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட சுகாதாரத் தொண்டர்கள் நேற்று வடக்கு ஆளுநர் செயலக முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக சுகாதாரத் தொண்டர்களாக பணியாற்றிய 970 பேரில் முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் எடுத்த முயற்சியின் பயனாக 349 பேருக்கு அவர்களது சேவை கால அடிப்படையில் அரச நியமனத்துக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், ஏனையோருக்கான நியமனம் இதுவரை வழங்கப்படாத நிலையில், தமக்கும் குறித்த நியமனத்தை வழங்குமாறு கோரி நேற்று வடக்கு மாகாண ஆளுநர் செயலக முன்றலில் நியமனம் வழங்கப்படாத வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதாரத் தொண்டர்கள் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்வர்கள் கருத்து தெரிவிக்கையில்;

நாங்கள் நீண்ட காலமாக தொண்டு அடிப்படையில் சுகாதாரத் தொண்டர்களாக கடமையாற்றி வருகின்றோம். மொத்தமாக 970 பேர் வடக்கு மாகாணத்தில் உள்ளோம். ஆனால் 349 பேருக்கு மாத்திரமே நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டு தற்போது அவர்களுக்குரிய நியமனம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் நாம் முன்வைக்கும் கோரிக்கை என்னவென்றால், வடக்கு மாகாணத்தில் உள்ள 970 சுகாதாரத் தொண்டர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு தற்போது வடக்கு மாகாணத்துக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியே இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபடுகிறோம், என்றனர்.

கவனவீர்ப்புப் போராட்டத்தில் நியமனமற்ற  சுகாதாரத் தொண்டர்கள்

எஸ் தில்லைநாதன்