
posted 22nd November 2021
பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் கனடாவில் பங்கேற்ற கூட்டத்தில் தமிழர்களில் ஒரு சாரார் சுமந்திரனுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவர்கள் கூட்டத்திலிருந்து இடைநடுவிலேயே வெளியேறியதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன
அமெரிக்காவின் அழைப்பின் பேரில் எம். ஏ. சுமந்திரன் எம். பி. தலைமையில் மூவர் கொண்ட நிபுணர் குழு அமெரிக்கா சென்றது. இந்தக் குழுவுடன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனும் பங்கேற்றார்.
அமெரிக்க சந்திப்பை முடித்துக் கொண்ட அவர்கள் கனடா சென்றுள்ளனர். அங்கு, ஒழுங்கு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் சுமந்திரனும், சாணக்கியனும் பங்கேற்ற போது, சுமந்திரன் உரையாற்ற முற்பட்டபோது அவரை பேசவிடாது எதிர்ப்பு தெரிவித்தனர். 'தமிழினத் துரோகி', 'பச்சைத் துரோகி', 'கள்ள வாக்கு எம்.பி.' என்று பலர் கோஷங்களை எழுப்பினர்.
எனினும், தொடர்ந்து சுமந்திரன் எம். பி. பேச முற்பட்ட போதும், அவரை பேசாவிடாது பெரும் குழப்பம் ஏற்படுத்தப்பட்டது. ஒரு கட்டத்தில் எதிர்ப்பாளர்களை சமாளிக்க முடியாமல் கனடிய பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து சுமந்திரன் வெளியேற, அவருடன் சாணக்கியனும் வெளியேறியிருந்தார். இதைத் தொடர்ந்து கூட்டமும் இடைநிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன்