
posted 25th November 2021
லங்கையில் 1956 ஆம் ஆண்டில் அரச கரும மொழிச் சட்டத்தை கொண்டுவந்து தமிழ் மக்களின் உரிமையைப் பறிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதைப் போன்று, ஜனாதிபதி நியமித்துள்ள "ஒரு நாடு ஒரு சட்டம்" என்ற செயலணியின் மூலம் முஸ்லிம் மக்களைப் பழிவாங்க நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறினார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி, பிரதமரின் அமைச்சுக்களின் செலவினங்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “ஒரு நாடு ஒரு சட்டம்" தொடர்பான ஆணைக்குழு நியமனம் தொடர்பில் நாட்டுக்குள் பாரியதொரு குழப்ப நிலை ஏற்பட்டிருக்கின்றது. இதன் உண்மைத் தன்மை என்ன?. என்பதைத் தேடிப்பார்க்க வேண்டும்.
எனவேதான், இந்த நடவடிக்கையும் 1956 இல் அறிமுகப்படுத்தப்பட்ட சிங்களம் மட்டும் அரச கரும மொழிச் சட்டத்தின் விளைவாக நாட்டில் ஏற்பட்ட குழப்பமான நிலையை போன்றதொரு சூழ்நிலைக்கு வழிவகுக்கின்றதோ
என்ற சந்தேகம் எழுகின்றது.
1956 இல் சிங்களத்துடன் ஆங்கில மொழியை அரவணைத்துக் கொண்டு தமிழ் மக்களின் மொழி உரிமையை இல்லாமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அவ்வாறே தற்போது முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து "ஒரு நாடு ஒருசட்டம் " என்ற செயலணியின் பின்னால் இருந்து மேற்கொள்ளப்போவதன் உண்மை நோக்கம் என்ன?
சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்ற குறிக்கோளுக்கமையவே இந்த செயலணி அமைக்கப்பட்டிருக்கின்றது என சிலர் பிழையாக விளங்கிக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு அல்ல. சட்டத்தில் சமத்துவம் இல்லை என்ற மோசமான கருத்தை முன்னிலைப்படுத்தியே அரசாங்கம் இதைச் செய்யப்போகின்றது என்றே நாங்கள் காண்கின்றோம்.
நாட்டில் அனைவருக்கும் சமமான சட்ட அதிகாரம் இருக்க வேண்டும் என்பதை யாரும் ஏற்றுக் கொள்கின்றனர். உண்மையிலேயே அவ்வாறான சட்ட கட்டமைப்பொன்று இல்லாமலா நாங்கள் வாழ்கின்றோம்.
நாட்டின் அரசியலமைப்பில் சமத்துவம், நீதியின் சுயாதீனம் என்பன தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஒவ்வொரு பிரஜையும் சமமானவர்கள் என அரசியலமைப்பு தெரிவிக்கின்றது.
அப்படியானால் , ஒரு நாடு ஒரு சட்டத்தின் நோக்கம் என்ன? அதேபோன்று எமது தண்டனைச் சட்டத்தில் அதிகமான சட்டங்கள் ரோமன்,டச்சு மற்றும் வெளிநாட்டு சட்டங்களுடன் தொடர்புபட்டே இருக்கின்றன.
எனவே ஒரு சமூகத்தின் தனியார் சட்டம் தொடர்பாக இருக்கும் பலதரப்பட்ட பிரச்சினைகளை அடிப்படையாக் கொண்டு மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தையும் ,விரிசலையும் ஏற்படுத்தி, அதன் மூலம் அந்த உரிமைகளை இல்லாமலாக்க எடுக்கும் முயற்சியாலும், வைராக்கியம் குரோதத்தை வளர்க்கும் தேரர் ஒருவரை குறித்த செயலணிக்கு தலைவராக்கி, மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கையாலும் மீண்டுமொருமுறை 1956 இல் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியதுபோன்று முஸ்லிம் மக்களையும் பழிவாங்க மேற்கொள்ளும் நடவடிக்கையாகவே இதனை நாங்கள் பார்க்கின்றோம் என்றார்.
இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் கூற்றொன்றை சுட்டிக்காட்டி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் உரையாற்ற ஆரம்பித்தவேளையில் , அவர் அடுத்தடுத்து குறுக்கீடுகளைச்செய்தார். அவற்றிற்கு பதிலளித்த உயிர்த்த ஞாயிறு விசாரணைக் குழுவின் அறிக்கையின் முழுமையான உள்ளடக்கங்கள் கையளிக்கப்படுமானால், ஏனைய சிலருக்கு விடுக்கப்படும் அறைகூவலை (சவாலை) தாமும் ஏற்று, அதன் சர்ச்சைக்குரிய பின்னணி தொடர்பில் விளக்கம் அளிக்க முடியும் என ஹக்கீம் நம்பிக்கை வெளியிட்டார்.

ஏ.எல்எ.ம்.சலீம்)